காதல் திருமணம் - 5 ஆண்டுகளாக எதிர் வீட்டில் தனி வாழ்க்கையில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை
மயிலாடுதுறை அருகே காதலித்து பதிவுத்திருமணம் செய்து கொண்டு எதிர் எதிர் வீட்டில் இருந்தும் சேர்ந்து வாழாத இளம்பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை, இவர் மகள் 29 வயதான கனகலட்சுமி. எம்.இ., பொறியியல் முதுகலை பட்டதாரியான இவர் தனது எதிர்வீட்டில் வசிக்கும் பகுதிநேர வாகன ஓட்டுனரான 32 வயதான சக்திவேல் என்பவரை காதலித்து வந்துள்ளார். கனகலட்சுமியின் தாய் மாற்றுசமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு சக்திவேலின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு கடலூரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனாலும், இருவரையும் சேர்ந்த வாழ கணவர் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் எதிர்எதிர் வீட்டில் வசித்தாலும், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதுகுறித்து, கனகலட்சுமி குடும்பத்தார் சக்திவேல் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி (ஆவணி 3) முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
Jayakumar ADMK: வீர தீர சூர வசனங்களும் ஃபோட்டோ ஷூட்டும்தான்.. முதலமைச்சரை விமர்சிக்கும் ஜெயக்குமார்
இந்நிலையில், செல்லதுரை விவசாய வேலைக்காக வெளியில் சென்றுவிட்டதால் கனகலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் வேலைமுடித்து விட்டு செல்லதுரை வீடுதிரும்பிய போது, வீட்டில் கனகலட்சுமி துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்லதுரை இது தொடர்பாக பொறையார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் சக்திவேல் மேலும் சிலருடன் வீட்டிற்கு வந்ததாகவும், கணவன் சக்திவேல் தன்மகளை அடித்து கொன்றுவிட்டதாகவும், தனது மகள் 2 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், கனகலட்சுமியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் பொறையார் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என 174 வழக்குப்பதிவு செய்து கனகலட்சுமியின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பதிவுத் திருமணம் நடைபெற்று 7 ஆண்டுகள் நிறைவடையாததால் இச்சம்பவம் குறித்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா விசாரணை மேற்கொண்டுள்ளார். திருமணமாகி 5 ஆண்டுகளாக கணவரோடு சேர்ந்து வாழாத இளம்பெண்ணுக்கு விரைவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கணவருடன் சேர்ந்து வாழ இருந்த நிலையில், மர்மமான முறையில் தூக்கிட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)