சுவரை உடைக்க சத்து இல்லாமல் பாதியில் சென்ற திருடர்கள்; வங்கி லாக்கர் தப்பியது!
புதுச்சேரி அருகே மர்மநபர்கள் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் தப்பியது.
புதுச்சேரியை அடுத்த அபிஷேகப்பாக்கம் மெயின் ரோட்டில் சவுத் இந்தியன் என்ற தனியார் வங்கி இயங்கி வருகிறது. இங்கு தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். வழக்கம் போல் காலையில் ஊழியர்கள் வங்கியை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வங்கியின் பின் பகுதியில் உள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தன. மேலும் பணம், நகைகள் வைத்திருக்கும் லாக்கர் இருக்கும் அறையின் பின்புற சுவர் உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வங்கி கிளை மேலாளர் மற்றும் தவளக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தெற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் விரைந்து வந்து வங்கியை பார்வையிட்டனர். அப்போது வங்கியில் மர்ம கும்பல் புகுந்து கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டதும், நகை, பணம் கொள்ளை போகவில்லை என்பதும் தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள், தடயவியல் வல்லுநர்கள் விரைந்து வந்து வங்கியில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் புதுச்சேரியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் நள்ளிரவில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் வங்கியின் பக்கவாட்டு பகுதி வழியாக சென்று பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை கியாஸ் வெல்டிங் மூலம் அறுத்துள்ளனர். சுமார் 4 கம்பிகளை அறுத்து வங்கிக்குள் புகுந்த அவர்கள், லாக்கர் இருக்கும் அறை சுவரை நவீன எந்திரம் மூலம் ஒரு ஆள் உள்ளே புகுந்து செல்லும் அளவுக்கு உடைத்துள்ளனர். ஆனால் சுவர் உறுதியாக இருந்ததால் உடைக்க அதிக நேரமாகியுள்ளது. இதனால் அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றுள்ளனர்.
மேலும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், தங்களை பற்றிய அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், அதன் மென்பொருள் மற்றும் லாக்கரை உடைத்தால் சைரன் சத்தம் எழுப்பும் கருவியின் வயரையும் முன்கூட்டியே துண்டித்துள்ளனர். இதனால் எச்சரிக்கை சத்தம் ஒலிக்கவில்லை. கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் பற்றிய அடையாளம் தெரியவில்லை. எனவே அவர்கள் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை முயற்சி குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை பாதியில் கைவிட்டு சென்றதால் வங்கி லாக்கரில் வைத்துள்ள வாடிக்கையாளர்களின் பல கோடி ரூபாய் பணம், தங்க நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது.கொள்ளை முயற்சி பற்றிய தகவல் அறிந்த வாடிக்கையாளர்கள் பலர் வங்கியில் திரண்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.