கோவை மாணவி தற்கொலை: ஆசிரியர் வீட்டில் ரெய்டு... மாணவி வீட்டிலிருந்த புத்தகங்கள் சேகரிப்பு!
மாணவியின் வீட்டில் சோதனை நடத்திய காவல் துறையினர் மாணவியின் நோட்டு புத்தகங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் வீட்டிலும் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவிக்கு உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவி தற்கொலை குறித்து 4 தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு பேர் யார்?, வேறு யாரேனும் தற்கொலைக்கு தூண்டுனார்களா? தற்கொலைக்கு வேறு எதேனும் காரணங்கள் இருக்கிறதா?உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் வீட்டில் சோதனை நடத்திய காவல் துறையினர் மாணவியின் நோட்டு புத்தகங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் லாலி சாலையில் உள்ள வீட்டிலும் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதனிடையே மாணவியின் வீட்டிற்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.