திரில்லர் படங்களை மிஞ்சும் பரபரப்பு... பொம்மை உடல், நிஜ பாம்பை வைத்து கொலை வழக்கு விசாரணை!
உத்ராவை போன்ற பொம்மையை உருவாக்கி அதன் கையில் கோழிக்கறி துண்டை சொருகி, நிஜ பாம்பை கடிக்க விட்டு சோதனை செய்துள்ளது கேரளா போலீஸ்
கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் குற்றவாளியை அல்லது தடயங்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்களை போலீஸ் பயன்படுத்தி நாம் பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் ஒரு பெண்ணின் கொலை வழக்கை விசாரிக்க பாம்பை பயன்படுத்தி இருக்கிறது போலீஸ்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சல் பகுதியில் உத்ரா என்ற 26 வயது பெண் கடந்த 2020-ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டில் பாம்பு கடித்து உயிரிழந்தார். இந்த நிலையில், உத்ராவின் கணவர் சூரஜின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணையை தொடங்குகின்றனர்.
அதில், பல திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கிறார் சூரஜ். வங்கி ஊழியரான அவர், தனது மனைவியை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். அதை பாம்பு கடித்து இறந்ததை போல் சித்தரிப்பதற்காக நாகப்பாம்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளார் சூரஜ். அந்த பாம்பு உத்ராவை கடித்தாலும், அவர் உயிரிழக்கவில்லை. மருத்துவ சிகிச்சை பெற்று தனது பெற்றோர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சூரஜ் மீண்டும் கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். கடந்த முறை உத்ரா தப்பியது போல் இம்முறை தப்பித்துவிடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார். உத்ராவை கொலை செய்ய சூரஜ் குறித்த நாள் மே 7, 2020. அப்போது தனது பெற்றோர் வீட்டில் ஓய்வில் இருந்த உத்ராவை கொல்ல மீண்டும் அதிக விஷ சக்தி கொண்ட பாம்பை வாடகைக்கு எடுக்கிறார்.
இம்முறை உத்ரா தப்பித்துவிடாமல் இருக்க அவருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து உள்ளார். அதை உட்கொண்ட பின் மயங்கிய உத்ரா மீது, வாடகைக்கு வாங்கிய விஷம் கொண்ட பாம்பை போடுகிறார் சூரஜ். அது உத்ராவை கடித்தபின் அவர் உயிரிழக்கிறார். ஒரு வழியாக கொன்றுவிட்டோம் என நிம்மதியடைந்த சூரஜின் நடவடிக்கையே அவரை போலீசிடம் காட்டிக்கொடுத்து விட்டது.
கொலை வழக்கில் சூரஜை கைது செய்த போலீசார், 82 வது நாளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. உத்ராவை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்ததாகவும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் சூரஜ்ஜின் தாய் மற்றும் சகோதரி மீது போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த கொலையை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவே உத்ராவை போன்ற பொம்மையை உருவாக்கி அதன் கையில் கோழிக்கறி துண்டை சொருகி, நிஜ பாம்பை கடிக்க விட்டு சோதனை செய்துள்ளது கேரளா போலீஸ். கொல்லத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு உள்ள பொம்மை மீது பாம்பை போட்டுள்ளனர்.
தொடக்கத்தில் பாம்பு பொம்மையை கடிக்கவில்லை. பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு அந்த பொம்மையை பாம்பு இருமுறை கடித்து உள்ளது. முதல் முறை 2 செ.மீ அளவும், 2வது முறை 2.4 செ.மீ. அளவும் 2.4 செ.மீ. அளவும் கடித்து இருப்பதை போலீசார் குறித்துக்கொண்டனர். இந்த பரிசோதனை சூரஜ் மீதான குற்றத்தை நிரூபிக்க உதவும் என கேரளா போலீஸ் நம்புகிறது.