Crime : கொடுப்பதுபோல் கொடுத்து பிடுங்கிய ஆன்லைன் ரம்மி...! ஓட்டல் ஊழியர் தற்கொலை..!
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூபாய் 2 லட்சம் வரை இழந்த ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காந்திராஜன். 35 வயதான இவர் வேளச்சேரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஓரிரு தினங்களாக காந்திராஜன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை காந்திராஜனின் பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்தனர்.
அப்போது, வீட்டிற்கு தண்ணீர் கேன் போட வந்த இளைஞர் கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவைத் தட்டி யாரும் திறக்காததால் அந்த இளைஞர் ஜன்னல் வழியாக வீட்டில் இருப்பவர்களை அழைக்க பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே உள்ள மின்விசிறியில் காந்திராஜன் சடலமாக தொங்கியுள்ளார். இதையடுத்து, உடனே அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். உடனே, அவர்கள் இந்த விவகாரம் பற்றி குமரன்நகர் காவல்நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காந்திராஜனின் மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது. காந்திராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கியுள்ளார். பின்னர், இந்த விளையாட்டின் தொடக்கத்தில் காந்திராஜனுக்கு பணம் கிடைத்துள்ளது. இதனால், இந்த விளையாட்டிற்கு காந்திராஜன் அடிமையாகியுள்ளார். ஆனால், அதன்பின்னர் அவர் ஏராளமான பணத்தை இழக்கத் தொடங்கினர்.
இழந்த பணத்தை மீட்பதற்காக மீண்டும், மீண்டும் விளையாடி ரூபாய் 2 லட்சம் வரை இழந்தார். இழந்த பணத்தை மீட்பதற்காக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி ஆடியுள்ளார். ஆனால், அவருக்கு அதிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் அளித்தவர்களும் தொடர்ந்து அவரிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால், பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத காந்திராஜன் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன்காரணமாக, கடந்த ஓரிரு வாரங்களாகவே காந்திராஜன் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இந்த சூழலில்தான் காந்திராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்