Watch Video: முகமூடி அணிந்த கும்பல்.. குறி வைக்கப்பட்ட நபர் - அரசியல் கொலைகளால் கர்நாடகாவில் பதட்டம்!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் வியாழக்கிழமை மாலை முகமூடி அணிந்த மர்ம நபர்களால் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் வியாழக்கிழமை மாலை முகமூடி அணிந்த மர்ம நபர்களால் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை இரவு பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்டதால் மாவட்டத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
#Karnataka: Man stabbed to death by masked attackers in Surathkal, Section 144 imposed in Surathkal, Mulky, Panambur and Bajpehttps://t.co/vF0kOusCtH
— Newsroom Post (@NewsroomPostCom) July 29, 2022
23 வயதான ஃபாசில், தனக்கு தெரிந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்த வந்தவர்கள் காரில் வந்திறங்கியதாகவும் பின்னர், ஃபாசிலை நோக்கி ஓடி சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், கருப்பு துணி முகமூடிகளால் முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர்கள் துணிக்கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த நபரைத் தாக்குவது பதிவாகியுள்ளது.
அவரை பலமுறை தடியால் தாக்கிய பின்னர், சரமாரியாக குத்தினார். அவர் சரிந்து கீழே விழுந்த பிறகு துணி கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பொம்மை அவர் மீது விழுந்த பிறகும் கூட, ஒரு நபர் அவரைத் தொடர்ந்து தாக்குவது வீடியோவில் காணலாம்.
அவர் ஏன் தாக்கப்பட்டார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், குற்றவாளிகளை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு சூரத்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய மக்கள் கூடுவதைத் தடை செய்யும் தடை உத்தரவுகள் ஜூலை 30 வரை அமல்படுத்தப்பட்டுள்ளன.
"இது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட பகுதி. எனவே, சூரத்கல் மற்றும் அதை ஒட்டிய மூன்று காவல் நிலைய எல்லைகளான முல்கி, பனம்பூர், பாஜ்பே பிஎஸ் எல்லைகளில் பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன" என்று மங்களூருவில் உள்ள காவல்துறைத் தலைவர் சஷி குமார் கூறியுள்ளார்.
அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. கர்நாடகா-கேரள எல்லை உள்பட 19 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இரவு 10 மணிக்குப் பின்னர் நகருக்குள் யாரும் நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆறு காவல் நிலையங்களில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்