கரூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வாங்கிலி கார்டன் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 72). இவரும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் டி.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (55) என்பவரும் பரமத்தி வேலூரில் இருந்து கரூர் நோக்கி சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் வங்கி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது சிவராமகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் ராமதாஸ் அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் ராமதாஸ் படுகாயம் அடைந்தார். சிவராம கிருஷ்ணனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து ராமதாஸ் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராமதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதபாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.





















