வடமாநில தொழிலாளர் மர்மமான முறையில் மரணம் - சேலத்தில் பரபரப்பு
கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை.
சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே உள்ள நரசிம்ம செட்டிரோடு பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவரின் சடலம் முற்புதருக்குள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணைை நடத்தினர். முதலில் அடையாளம் தெரியாத நபர் என கூறப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பருப்பு ஆலையில் பலர் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்வது தெரிய வந்தது. உடனடியாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் பருப்பு ஆலையில் தொடர்பு கொண்டு கேட்டபோது ஒருவர் காணவில்லை என கூறியுள்ளனர்.
உடனடியாக அங்கிருந்து அடையாளம் காண்பதற்காக ஒருவரை அனுப்பி வைத்தனர். இந்த விசாரணையில் சடலம் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் பருப்பு ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தோராஜ் அன்சாரி (41) என்ற வடமாநில தொழிலாளர் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு வராமல் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதிகளவில் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் உடலில் ஆங்காங்கே ரத்த காயங்கள் காணப்படுகிறது. வட மாநில தொழிலாளர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இறப்பிற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் தனியார் பருப்பு ஆலையின் உரிமையாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே இறந்த வடமாநில தொழிலாளர் அருகே இருந்த அவருடைய செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றி அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வடமாநில தொழிலாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.