Crime: நெல்லையில் போலி பத்திர பதிவு செய்ய முயன்ற இருவர் கையும் களவுமாக சிக்கியது எப்படி ?
”சாமுவேல் மூக்கையாவின் ஆதார் கார்டு போன்று ஆதார் கார்டை வைத்து பத்திரம் பதிவு செய்யும்போது அதிலுள்ள ஆதார் எண் குலசேகரம் பகுதியை சேர்ந்த தங்கப்பன் என்பவரின் பெயரில் இருப்பது தெரிய வந்தது”
நெல்லை பாளையங்கோட்டை பரணர் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் மூக்கையா. இவருக்கு சொந்தமான இடம் வி.எம். சத்திரம் இந்திரா நகரில் உள்ளது. மொத்தம் 5 சென்ட் கொண்ட இந்த நிலம் 25 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ளதாகும். இந்த இடத்தை பாளை வடக்கு ரத வீதியை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு பவர் எழுதி கொடுப்பது போன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவானது. அப்போது சாமுவேல் மூக்கையாவின் ஆதார் கார்டு போல ஒரு ஆதார் கார்டை வைத்து பத்திரம் பதிவு செய்யும் போது அதிலுள்ள ஆதார் எண் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்த தங்கப்பன் என்பவரின் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த சார் பதிவாளர் சண்முகசுந்தரம் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பத்திரப்பதிவு குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தங்கப்பன் என்பவர் தனது புகைப்படத்தை வைத்து அதில் சாமுவேல் மூக்கையா என்பவரின் பெயர், முகவரி ஆகியவற்றை தயாரித்து போலி ஆதார் கார்டு எடுத்து அதன் மூலம் போலி பத்திரப்பதிவு செய்ய முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து குமரி மாவட்டம் காவு விளையை சேர்ந்த தங்கப்பன் மற்றும் பாளையங்கோட்டையை சேர்ந்த லட்சுமணன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரம் போட முயன்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்