Crime: நக்கீரன் செய்தியாளர், புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல் - 5 பேர் கைது
பத்திரிகையாளரை தாக்கிய சின்ன சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் (35), தீபன் சக்ரவர்த்தி (36), செல்வகுமார் (38), பாலகிருஷ்ணன் (45), ராஜசேகர் (44) ஆகிய ஐந்து பேரை தலைவாசல் காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற பிரகாஷ் (தலைமை செய்தியாளர் நக்கீரன்) மற்றும் புகைப்படக் கலைஞர் அஜீத் குமார் ஆகிய இருவரும் சென்று உள்ளனர். அப்போது அவரை வழிமறித்து பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் தம்பி அருள் சுபாஷ் மற்றும் அவருடன் வந்திருந்த பத்துக்கும் மேற்பட்டோர் செய்தியாளர்களின் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து சேலம் நோக்கி காரை வேகமாக இயக்கி வந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தவர்கள் தலைவாசலில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு தலைவாசல் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் புகைப்படக் கலைஞர் அஜித் குமார் என்பவரது பல் உடைந்துள்ளது. இதுகுறித்து ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் தம்பி அருள் சுபாஷ், மோகன், ராஜசேகர் உட்பட 10 பேர் மீது தலைவாசல் போலீசார் கொலை முயற்சி உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பத்திரிகையாளரை தாக்கிய சின்ன சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் (35), தீபன் சக்ரவர்த்தி (36), செல்வகுமார் (38), பாலகிருஷ்ணன் (45), ராஜசேகர் (44) ஆகிய ஐந்து பேரை தலைவாசல் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த நான்கு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்:
இத்தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் ,புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் பழிவாங்கும் போக்கு அதிகரித்து வருவதை காண முடிகிறது. இது ஒரு ஆரோக்கியமான போக்காக இருக்காது என்பதை ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் உணர வேண்டும். பத்திரிகையாளர்களை தாக்குகின்ற சமூக விரோத கும்பலாக இருந்தாலும் சரி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீது சட்டபூர்வ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முதலமைச்சரிடம் கோரிக்கை:
பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்குரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்பதுதான் அனைத்து பத்திரிகையாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பலை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு தரப்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.