Crime: துண்டு துண்டாக வெட்டப்பட்ட பாஜக பெண் பிரமுகர்.. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சுசிலாம்மா வசித்த வீட்டின் அருகே இருந்த காலி இடத்தில் பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்று இருந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பெங்களூருவில் பாஜகவின் பெண் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசில்லாமா. 70 வயதான இவர் பாஜக பிரமுகராக உள்ளார். இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள நிகர்சா என்ற குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். அதே குடியிருப்பில் தான் சுசிலாம்மாவின் ஒரு மகள் குடும்பத்துடன் இருந்து வருகிறார். ஆனால் மகன், மகள்களிடம் பெருமளவு நெருக்கம் காட்டாமல் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
அதேசமயம் கட்சி விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்த சுசிலாம்மா அடிக்கடி கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள் பங்கேற்க சென்று விடுவார். மற்ற நேரங்களில் தன்னுடைய சொத்துகளை ஏலம் விடுவது, குத்தகை முறையில் விற்பது என இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது சொத்து தொடர்பான சில வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற சுசிலாம்மா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அந்த குடியிருப்பில் இருக்கும் மகள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரித்துள்ளார். அதேசமயம் தேர்தல் நேரமாக இருப்பதால் தனது தாய் வெளியே சென்றிருக்கலாம் என நினைத்துள்ளார்.
இப்படியான நிலையில் சுசிலாம்மா வசித்த வீட்டின் அருகே இருந்த காலி இடத்தில் பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்று இருந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பீப்பாயை திறந்து பார்வையிட்ட போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பீப்பாயினுள் பெண் ஒருவர் உடலை 6 துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக உடல் பாகங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அது காணாமல் போன சுசிலாம்மாவின் உடல் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் வீட்டின் அருகே வசித்து வரும் தினேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட அவரிடம் இருந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. பாஜக கட்சியில் இருக்கும் தினேஷ் அவ்வப்போது கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு சுசிலாம்மாவுடன் சென்று வந்துள்ளார். இதனை அவரின் மகளும் கவனித்துள்ளார்.
அதேசமயம் தினேஷூக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக சுசிலாம்மாவிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அவரை கொன்றுள்ளார். உடலை 6 துண்டுகளாக வெட்டி ஏரிப்பகுதியில் வீச முடிவு செய்துள்ளார். ஆனால் சுசிலாம்மாவின் வீட்டின் அருகே ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அன்று இரவு முழுவதும் அவரது வீட்டிலேயே இருந்துள்ளார். தொடர்ந்து அங்கேயே இருந்தால் சிக்கி விடுவோம் என நினைத்ததால் பீப்பாயில் போட்டு மறைத்துள்ளார். இதனையடுத்து போலீசார் தினேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.