சென்னையில் பயங்கரம் : தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
சமீபத்தில் வந்த தந்தையும் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். ஆனாலும் நித்திஷூக்கு சரியாக படிப்பு வரவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
சென்னையில் அறிவுரை கூறிய தாய் மற்றும் தம்பியை கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் திருநகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஓமன் நாட்டில் பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மா, அண்ணாசாலையில் உள்ள அக்குபஞ்சர் மையத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு நித்திஷ் மற்றும் சஞ்சய் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் 20 வயதான நித்திஷ் வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். சஞ்சய் திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் முருகன் ஓமன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்து குடும்பத்தினருடன் நாட்களை செலவிட்டு மீண்டும் ஓமன் சென்றுள்ளார். இதனிடையே நித்திஷ் ஜூன் 20-ஆம் தேதி இரவு கணக்கர் தெருவில் உள்ள பெரியம்மா மகாலட்சுமி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது வீட்டின் சாவி மற்றும் ஒரு செல்போனை பையில் வைத்து, வீட்டு வாசல் அருகே வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் அந்த பை பற்றி மகாலட்சுமி மற்றும் அத்தை மகள் பிரியாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரியா அந்த மொபைல் போனை ஆன் செய்து பார்க்கையில் அதில் சில வாய்ஸ் மெசெஜ்கள் இருந்தது. அதனை ஒலித்து பார்த்தபோது நித்திஷ் தன்னுடைய அம்மாவையும், தம்பியையும் கொலை செய்து விட்டதாகவும், தானும் தற்கொலை செய்யப்போவதால் தேட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளான். மேலும் தன்னை மன்னித்து விடும்படி தந்தை முருகனிடம் வேண்டுகோள் விடுத்தும் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா, மகாலட்சுமியிடம் விசாரித்துள்ளார்.
உடனடியாக இருவரும் பத்மாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கதவை திறந்து பார்த்தால் இரண்டு சாக்கு மூட்டைகள் ரத்த கறையுடன் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் பத்மாவும், சஞ்சய்யும் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தனர். இருவர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவர் நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக போலீசார் இரவு முழுவதும் நிதிஷை தேடியுள்ளனர். அவர் பலகை தொட்டி குப்பம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டு இருந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் காவல்நிலையம் அழைத்து சென்று நித்திஷிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. பி.எஸ்சி., டேட்டா சயின்ஸ் படித்து வரும் நித்திஷூக்கு படிப்பு சரியாக வராத நிலையில் மொத்தமாக 14 அரியர்ஸ் வைத்திருந்துள்ளார். இதனால் பத்மா, மகனை நன்றாக படிக்க வேண்டுமென கண்டித்துள்ளார். சமீபத்தில் வந்த தந்தையும் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். ஆனாலும் நித்திஷூக்கு சரியாக படிப்பு வரவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நித்திஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதேசமயம் தாயும், தம்பியும் தனியாக இருப்பார்களே என நினைத்து இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த வியாழக்கிழமை தாயிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கத்தியை எடுத்து கழுத்தில் குத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பத்மா அலறியபடி மயங்கி சரிந்த நிலையில் சத்தம் கேட்டு தம்பி சஞ்சய் வந்துள்ளார். அவனையும் குத்தி கொலை செய்துள்ளார். இருவர் உயிரிழந்ததையும் உறுதி செய்த நித்திஷ் சாக்கு மூட்டைகளில் உடல்களை கட்டியுள்ளார். பின்னர் சிறிது நேரம் வீட்டில் இருந்து விட்டு திருவெற்றியூர் அருகே ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் தைரியம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டுக்கு சென்று அனைவரையும் சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் அன்று மாலையில் மகாலெட்சுமி வீட்டுக்கு சென்று சாவி, போனை வைத்து விட்டு எல்லையம்மன் கோயில் அருகே உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து பலகைக்குப்பம் கடற்கரைக்கு வந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதுவும் முடியாத நிலையில் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது தான் போலீசார் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.