CRIME: மயிலாடுதுறையில் பழிக்கு பழியாக நடந்த கொலை - 7 பேர் கைது
மயிலாடுதுறையில் இளைஞர் தலை சிதைக்கப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறையில் இளைஞர் படுகொலை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் 26 வயதான அஜித்குமார். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் நேற்று முன்தினம் இரவு (புதன்கிழமை) மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தெற்குவீதி பகுதியில் இருசக்கர வாகனத்தில் உறவினர் சரவணன் உடன் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி தலை சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். உடன் வந்த உறவினர் சரவணன் கையில் வெட்டுக் காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்து ஓடி ஒரு வீட்டிற்குள் புகுந்து பதுங்கியிருந்தவரை காவல்துறையினர் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டார்.
உறவினர்கள் போராட்டம்
அஜித்குமார் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்து வியாழக்கிழமை இரவு வரை அஜித்குமார் உடலை பெறாமல் சாலைமறியல் போராட்டத்தில் உறவினர்கள் மற்றும் கலைஞர் காலணி பகுதி மக்கள் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மயிலாடுதுறையில் சில கடைகளை சேதப்படுத்தியதால் பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையத்துக்குள் பேருந்து வருவது தடை செய்யப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகள் பொதுமக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
9 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மயிலாடுதுறை காவல்துறையினர் கொலை சம்பவம் தொடர்பாக கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆயுத தடுப்பு சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த சூழலில் கடந்த 2022- ஆம் ஆண்டு மயிலாடுதுறை கொத்தத்தெரு வன்னியர் சங்க முன்னாள் பிரமுகர் கண்ணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் நேற்று முன்தினம் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பழிக்கு பழியாக நடைபெற்ற கொலை சம்பவம்
படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ள சரவணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அஜித்குமார் கொலை சம்பவத்தில் கடந்த 2022 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வன்னியர் சங்க பிரமுகரின் சகோதரர் மில்கி (எ) சந்திரமோகன், மணக்குடி சதீஸ், மயிலாடுதுறையை சேர்ந்த பாம் பாலாஜி, சித்தமல்லியை சேர்ந்த ஆவன்னா என்கிற ஶ்ரீராம், திருவிழந்தூரை சேர்ந்த சந்திரமௌலி, வக்காரமாரியை சேர்ந்த மோகன்தாஸ், தருமபுரம் பகுதியை சேர்ந்த சத்தியநாதன் ஆகிய 7 பேரை குழந்தைகள் தடுப்பு குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் தனிப்படை போலீசார் கைது செய்து குத்தாலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் சிலரை கைது செய்ய கோரி தொடரும் போராட்டம்
வன்னியர் சங்க பிரமுகர் கண்ணனை படுகொலை செய்தவர்களை பழிதீர்க்க வெடிகுண்டு வீசி கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாக காவல்துறையினரால் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட 15 பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்திரமோகன், மணக்குடி சதீஸ், சத்தியநாதன் ஆகியோர் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சதித்திட்டம் தீட்டிய வழக்கில் உள்ள அனைவரையம் கைது செய்ய வேண்டும் என்று கூறி உடலை வாங்காமல் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வராததால் மயிலாடுதுறை நகர பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.