மயிலாடுதுறை: திருமணமான நான்கு மாதங்களில் இளம்பெண் தற்கொலை! விசாரணை தீவிரம்..!
மயிலாடுதுறை அருகே திருமணமான நான்கு மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த மணி என்பவரது மகள் 24 வயதான மதுபாலா. இவருக்கும் மணல்மேடை அடுத்த முடிகண்டநல்லூரை சேர்ந்த 27 வயதான முருகன் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமண ஆன நாள்முதல் முருகன் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மணி தனது மகள் மதுபாலாவிடம் பேசுவதற்காக தொலைபேசியில் அழைத்துள்ளார். பலமுறை அழைத்தும் மதுபாலா போனை எடுத்து போசவில்லை. இதனால் சந்தேகமடைந்த மணி முடிகண்டநல்லூருக்கு தனது மகள் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு மதுபாலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்ததாக தெரியவந்துள்ளது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணி, தனது மகள் மதுபாலா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட மணல்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாலாவின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மதுபாலாவிற்கு திருமணமாக 4 மாதங்கள் மட்டுமே ஆவதால் வரதட்சணை கொடுமையாக இருக்கலாம் என்ற கோணத்தில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தனி விசாரணை மேற்கொண்டுள்ளார். திருமணமாகி மகிழ்ச்சியாக வாழவேண்டிய பெண் நான்கு மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாக பல்வேறு தரப்பு மக்களும் வேலைவாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியாக, மனதளவிலும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டு பல குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அதிகளவு சண்டை ஏற்பட்டு விரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும் பல குடும்பங்கள் பிரித்து விடுகின்றனர். மேலும் சிலர் தவறான முடிவை கையில் எடுத்து தற்கொலை முடிவை கையில் எடுக்கின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 - 24640050. மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தீர்வு காண வேண்டுமெனவும், இல்லையெனில் இதுபோன்ற விபரீத நிகழ்வுகள் நடைபெற்று, பலரது வாழ்க்கை பாழாகிறது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் தமிழ்நாடு அரசு இதுபோன்ற காலத்தில் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க இந்த பிரச்சனைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மனநல மருத்துவர்களை நியமனம் செய்யவேண்டும் என்றும் பலரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் மக்கள்.