கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞர் - காட்டி கொடுத்த முதியவருக்கு அரிவாள் வெட்டு
சீர்காழி அருகே திருவெண்காட்டில் கள்ளத்தொடர்பை காட்டிக் கொடுத்த முதியவரை இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே திருவெண்காட்டில் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞரை காட்டிக் கொடுத்த முதியவரை அரிவாளால் வெட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞருக்கும் முதியவருக்குமான பிரச்சினை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 60 வயதான முதியவர் சீனிவாசன். இவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான அருள்செல்வன் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணிடம் கள்ளத் தொடர்பில் இருந்ததை பார்த்தாகவும், தொடர்ந்து அதனை அப்பகுதி மக்களிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அருள்செல்வன் அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்த சீனிவாசனை அரிவாளால் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி உள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதில் படுகாயம் அடைந்த முதியவர் சீனிவாசன் அதே பகுதியில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த வரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெண்காடு காவல்துறையினர் அருள்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவரை இளைஞர் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















