நண்பனை கொன்று வடிவேலுவின் ‘சுனா பானா’ காமெடி டெக்னிக்கை பயன்படுத்தி தப்பிக்க முயற்சி - சிக்கியது எப்படி?
மயிலாடுதுறை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மதுவில் விஷம் கலந்து நண்பரை கொலை செய்த நாடகம் ஆடிய நபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மதுவில் விஷம் கலந்து நண்பரை கொலை செய்துவிட்டு, நடிகர் வடிவேலுவின் சுனா பானா காமெடி டெக்னிக்கை பயன்படுத்தி தப்பிக்க முயற்சித்த நபரை பெரம்பூர் காவல்துறையினர் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நண்பர்கள் இடையே முன்விரோதம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பில்லா விடந்தை கிராமத்தை சேர்ந்த டிரைவர்கள் 24 வயதான ஜெரால்டு மற்றும் 32 வயதான ஜோதிபாசு. நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 9 -ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தான மோனாகுரோட்டாபஸ் கலந்து குடித்துவிட்டதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவே ஜெரால்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்துறையினர் ஜோதிபாசுவிடம் விசாரணை செய்தபோது, தன்னிடம் சண்டையிட்டு மனைவி கோயமுத்தூருக்கு பிரிந்து சென்றுவிட்டதாகவும், விரக்தியில் மதுவில் பூச்சிமருந்து கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது அங்கு வந்த ஜெரால்டு தான் குடித்துக்கொண்டிருந்த விஷம் கலந்த மதுபானத்தை வாங்கி குடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
தொடர்ந்து ஜோதிபாசு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பெரம்பூர் காவல்துறையினர் 194 இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். விஷம் கலந்த மது அருந்திய நண்பர்கள் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்பட்டதால் நண்பர்கள் இருவருக்கும் முன்விரோதம் உள்ளதா? ஜெரால்டு உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட ஜெரால்டு உடலை உறவினர்கள் பெற்று சென்று இறுதி சடங்கு செய்யவதற்கு, முன்னதாக ஜெரால்டு உடலை அடக்கம் செய்யாமல் செம்பனார்கோவில் அருகே கடலி சாலையில் கொண்டு வந்து வைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
அப்போது கணவரை பிரிந்துவாழும் பெண் ஒருவருடன் ஜெரால்டு, ஜோதிபாசு ஆகிய இருவருக்குமிடையே பழக்கம் இருந்தது தொடர்பாக முன்விரோதம் இருந்ததால், ஜோதிபாசு திட்டமிட்டு மதுவில் விஷத்தை கலந்து ஜெரால்டுக்கு கொடுத்து கொலை செய்துள்ளார் என்று குற்றம்சாட்டிய உறவினர்கள் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜோதிபாசுவை கைது செய்ய வேண்டும் என்று கூறி 6 மணி நேரம் போரராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வெளிவந்த கள்ளக்காதல் விவகாரம்
ஜோதிபாசுவிடம் விசாரிக்க வேண்டும் என்று திருவாரூர் சென்றபோது அவர் சிகிச்சை முடிந்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஜோதிபாசுவை பிடித்து பெரம்பூர் காவல்நிலையம் கொண்டு சென்று போலீசார் நடத்திய விசாரணையில்’ பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜோதி பாசு திருமணம் செய்து கொள்ளாமல் கைகுழந்தையுடன் உள்ள ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார். அப்பெண்ணுக்கு ஜோதிபாசு மூலம் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணுடன் ஜோதிபாசுவுக்கு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை கண்ட பெண்மணி தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோயமுத்தூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
நண்பன் போனை பயன்படுத்தியதில் ஏற்பட்ட பிரச்சினை
கள்ளத்தொடர்பு தொடர்ந்த இந்நிலையில் தனது செல்போனில் சார்ஜ் இல்லை என்பதால் ஜெரால்டு போனை வாங்கி தன் கள்ளகாதலியுடன் ஜோதிபாசு பேசியுள்ளார். ஜெரால்டு தன் செல்பொனில் ஜோதிபாசு பேசிய பெண்ணின் நம்பருக்கு அடிக்கடி போன் செய்து பேசி காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனையறிந்து ஆத்திரமடைந்த ஜோதிபாசு ஜெரால்டை கொலை செய்ய முடிவு செய்து, நல்லாத்தூர் பகுதிக்குச் சென்று மது பாட்டில் வாங்கிக் கொண்டு நல்லாடை கிராமத்தில் உள்ள மருந்து கடையில் தென்னைக்கு வைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தான மோனாகுரோட்டாபஸ் ஒரு பாட்டிலையும் வாங்கிக்கொண்டு வந்துள்ளார். தென்னமரசாலையில் அமர்ந்து பிராந்தியில் பூச்சிமருந்தை கலந்து மதுபோதையில் வந்த ஜெரால்டுவிற்கு கொடுத்துவிட்டு கள்ளகாதலிக்கு போன் செய்து ஜெரால்டு விஷம் கலந்த மதுபானத்தை குடித்துவிட்டதாகவும் இனி தொல்லை இல்லை என்று கூறியுள்ளார்.
சூனா பானா காமெடி டெக்னிக்
மேலும் நடிகர் வடிவேலு படத்தின் சூனா பானா காமெடி டெக்னிக்கை பயன்படுத்தி தன் மனைவி திருப்பூர் சென்று விட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள மதுவில் விஷம் கலந்து வைத்திருந்ததை ஜெரால்டு எடுத்து குடித்து விட்டார் என்று நாடகமாடி அனைவரும் சந்தேகப்படகூடாது என்பதற்காக விஷம் கலந்த மதுவை சிறிது குடித்துவிட்டு தப்பிப்பதற்காக வாந்தி எடுத்ததும் தெரியவந்தது. ஜோதி பாசு மற்றும் அவரது கள்ளக்காதலி ஜெரால்ட் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்த தகவல்கள் மூலம் ஜெரால்டு கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து ஜோதிபாசுவை தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.