Crime: தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பதியப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மதுவிலக்கு குற்றங்கள் - அதிர்ச்சியில் மயிலாடுதுறை மக்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை அமலுக்கு பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் பதியப்பட்டு, 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல்
இந்திய நாட்டின் 18 -வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் மனுத் தாக்கலும் செய்து வருகின்றனர்.
காவல்துறையினர் நடவடிக்கைகள்
இந்த சூழலில் பாராளுமன்ற தேர்தல் நேர்மையாகவுகம், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு விதிமீறல்கள் தொடர்பாக காவல்துறையினர் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் மேற்பார்வையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ், தலைமை காவலர் சிவக்குமார், காவலர்கள் ராஜசேகர், ரகுராமன் மற்றும் காவல்துறையினர் சீர்காழி அருகே அளக்குடி பில்படுகை கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, திடீர் சோதனை செய்தனர்.
அப்போது 180 மி.லி, 90 மி.லி. அளவுக் கொண்ட புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் 2350 எண்ணிக்கையிலும், புதுச்சேரி சாராயம் 110 லிட்டரும் வீட்டின் பாத் ரூம் மற்றும் கொல்லைப்புறத்தில் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குமுதவல்லி என்ற பெண்ணையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய நபரை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மதுபானங்களில் மொத்த மதிப்பு ரூபாய் 3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் கடந்த சில நாட்களாக சீர்காழி பகுதியில் புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் போலீசாரின் அதிரடி சோதனையால் அதிகளவு கைப்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பதியப்பட்ட வழக்குகள்
மேலும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் முலம் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அதன் கள்ளச்சாராய விற்பனை, அயல் மாநில மதுபானங்கள் கடத்தல்களை தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையில் தேர்தல் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை இம்மாவட்டத்தில் 102 மதுவிலக்கு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 103 எதிரிகள் கைது செய்யப்பட்டும், 3,763 லிட்டர் பாண்டி சாராயம், 91 லிட்டர் அயல் மாநில மதுபானங்கள், 40 லிட்டர் தமிழ்நாடு மதுபானங்கள் மற்றும் 01 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மொத்த மதிப்பு 2,34,552 ரூபாய் ஆகும். மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி, சுவர் விளம்பரம், விளம்பர பதாகைகள் வைத்தது தொடர்பாக 65 வழக்குகளும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக 01 வழக்கும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள பிடிக்கட்டளைகளில் 19 பிடிக்கட்டளைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.