நாயால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை - மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்..
நாயால் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலையான சம்பவம் மயிலாடுதுறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே நாயால் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அகலங்கன் கிராமத்தில், வீட்டிற்குள் நாய் புகுந்த விவகாரம் தொடர்பாக உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் கீழ அகலங்கன் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த ஜூன் 11-ஆம் தேதி இரவு, மணிகண்டன் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அவரது சித்தப்பா சீமான் என்பவரின் நாய் மணிகண்டன் வீட்டிற்குள் புகுந்து மணிகண்டன் மீது பாய்ந்துள்ளது.
மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதல் ஆனது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டனின் சகோதரர் மகேந்திரன், சீமான் அவரது மகன் 25 வயதான சந்தோஷ், மற்றும் சீமானின் பேரன் சபரீஷ் ஆகிய மூவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன், காயமடைந்த மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொலை வழக்கு பதிவு
இந்நிலையில் சீமானின் மகன் சந்தோஷ் அளித்த வாக்குமூலத்தின் படி போலீசார் கொலை முயற்சி, கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலையில் வெட்டுபட்ட சீமான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கொலைவழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
கிராமத்தினரிடையே அதிர்ச்சி
நாய் ஒன்று வீட்டிற்குள் புகுந்த சிறிய தகராறு, இறுதியில் ஒரு உயிரைப் பறிக்கும் கொடூரமான கொலைச் சம்பவமாக மாறியிருப்பது அக்கிராமத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவுகளுக்குள் நடந்த இந்த துயரமான சம்பவம், சிறிய பிரச்சனைகளையும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குடும்ப சண்டைகள் மற்றும் பூசல்கள் எப்படிப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு துயரமான உதாரணமாக அமைந்துள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். சிறையில் இருக்கும் மகேந்திரனுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரும். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.






















