![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தரங்கம்பாடி: 10 மணி நேர விசாரணை - விஏஓவை தட்டித்தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை
பொறையாரில் பட்டா மாற்றம் மற்றும் சிறு விவசாயிக்கான சான்றுக்கு பரிந்துரை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை 10 மணி நேர விசாரணைக்கு பின்னர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
![தரங்கம்பாடி: 10 மணி நேர விசாரணை - விஏஓவை தட்டித்தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை mayiladuthurai Bribery vao arrested near tharangambadi தரங்கம்பாடி: 10 மணி நேர விசாரணை - விஏஓவை தட்டித்தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/a12d69ef5566d4ab89ff7035b0a5e4cf1698801618643733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொறையாரில் பட்டா மாற்றம் மற்றும் சிறு விவசாயிக்கான சான்றுக்கு பரிந்துரை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை 10 மணி நேர விசாரணைக்கு பின்னர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களின் சாதி சான்றிதழ் , பட்டா, பல்வேறு ஆவணங்கள் மற்றும் இன்னும் பல அரசு சார்ந்த சேவைகளை பெற லஞ்சம் கொடுத்தால்தான் நடைபெறும் என்ற சூழ்நிலை காலம் காலமாக தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பணி செய்தாலும், லஞ்சம் வாங்குவதை முழுவதுமாக தடுக்க முடியவில்லை. அதற்கு காரணமாக சொல்லப்படுவது, பொதுமக்கள் பலரும் லஞ்சத்தை ஒழிக்க முன் வராதது தான்.
அவர்களின் தேவை நிறைவேறினால் போதும் என்ற மனநிலையில் தான் பெரும்பாலான மக்கள் இருந்து வருகின்றனர். இதனால் லஞ்சம் கேட்பவர்கள் குறித்து வெளியில் தெரிவிக்காமல் அவர்களுக்கு சாதகமாக அவர்கள் கேட்டும் பணத்தை கொடுத்து விடுகின்றனர். இதற்கு விதி விலக்காக ஒரு சிலர் மட்டுமே லஞ்சம் கேட்பவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அதுபோன்று லஞ்சம் கேட்ட ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கு எதிராக செயல்பட்டதின் பயனாக தற்போது லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மயிலாடுதுறை அருகே லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா குட்டியாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவர் தனது மனைவி நாகலெட்சுமி பெயரில் பட்டா மாற்றம் மற்றும் சிறு விவசாயிக்கான சான்று வழங்க கோரி பொறையாறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். பட்டா பெயர் மாற்றம் மற்றும் சிறு விவசாயிகளுக்கான சான்றுக்கு பரிந்துரை செய்ய பொறையாரில் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக உள்ள காளியப்பநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் என்பவர் 2500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை கொடுக்க மனம் இல்லாத விஜய், இது குறித்து மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய 2500 ரூபாய் பணத்தை விஜய் பொறையாறு கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு பணத்தை பாண்டியராஜன் வாங்கிய போது மறைந்திருந்த மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் ஆய்வாளர் அருள்பிரியா மற்றும் போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து பாண்டியராஜனை கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனின் கைதை அறிந்த அப்பகுதி மக்கள் கூறுகையில், ”இந்த கிராம நிர்வாக அலுவலர் எந்த ஒரு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றாலும் அதற்கு கையூட்டு பெறாமல் வழங்கியது இல்லை. இதனால் இப்பகுதி பாமர மக்கள் யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் அவர் கேட்ட பணத்தை கொடுத்து வந்தனர். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் சிக்கியுள்ளார்” என கருத்து தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)