மயிலாடுதுறை பேருந்தில் கொள்ளைபோன தங்க நகைகள்.. ஆந்திராவில் மீட்ட காவல்துறை!
ஆந்திராவில் இருந்து கும்பலாக வந்து தங்கி கொள்ளையில் ஈடுபட்ட கும்பலிடம் இருந்து 18 சவரன் தங்க நகைகளை ஆந்திராவுக்கு சென்று மயிலாடுதுறை போலீசார் மீட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிராமம் சோழம்பேட்டை. அக்கிராமத்தை சேர்ந்தவர் 31 வயதான சத்யா. இவரது கணவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் சத்யா பள்ளி விடுமுறையை அடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை அழைத்து கொண்டு பந்தநல்லூரில் உள்ள அம்மா வீட்டிற்கு செல்ல திட்டமிட்டனர். அதனைத் தொடர்ந்து தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அம்மா வீட்டில் ஒரு வார காலம் தங்குவதற்கு செல்வதால் தான் வீட்டில் வைத்திருந்த மோதிரம், செயின், தோடு, நெக்லஸ், டாலர், செயின் உள்ளிட்ட 18 சவரன் தங்க நகையை வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பு இல்லாமல் திருட்டுப் போய்விடுமோ என்று எண்ணிய பையில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த சூழலில், மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது பந்தநல்லூர் வழியாக திருப்பனந்தாள் செல்லும் தமிழ் (பேருந்து எண்:24) என்ற தனியார் பேருந்து வந்துள்ளது. கூட்ட நெரிசலில் அந்த பேருந்தில் சத்யா தனது குழந்தையுடன் ஏறியதும் தனது பையை பார்த்துள்ளார். அப்போது தான் கையில் வைத்திருந்த பை (ஹேன்ட் பேக்) திறந்து இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி சத்யா, பை உள்ளே பார்த்தபோது பையில் இருந்த 18 சவரன் நகைகள் திருடுபோனது தெரியவந்த அடுத்து அவர் கூச்சலிட்டுள்ளார். அவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு உடனடியாக பேருந்து நிலையத்தில் இருந்து காவல்துறையினர் பேருந்தில் இருந்த பயணிகள் யாரையும் கீழே இறங்கவிடாமல் பேருந்தை மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகளை ஒவ்வொருவராக இறங்கசொல்லி சோதனை செய்தனர். ஆனால் நகை கிடைக்கவில்லை. தனியார் பேருந்து முழுவதும் தேடி பார்த்தனர் அப்போதும் பேருந்திலும் நகைகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பேருந்தின் உள்ளே உள்ள சிசிடிவி கேமரா வையும், பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் வைத்து போலீசார் நகையை கொள்ளையடித்தவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பேருந்து நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட பேருந்து, மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது, அனைவரும் பேருந்தில் ஏற முயற்சிக்கும்போது, ஒரு பெண் மட்டும் தன் குழந்தையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் பேருந்தில் இருந்து இறங்குவது தெரியவந்தது. இதையடுத்து, அதற்கு முந்தைய சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது சம்பந்தப்பட்ட பெண் 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏறி இறங்குவது தெரியவந்தது. பேருந்தில் பிச்சை எடுப்பவர் போன்ற தோற்றத்தில் இருந்த அந்தப் பெண் குறித்த விபரங்களை சேகரித்த போது, அந்தப் பெண் உள்ளிட்ட சிலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு குழுவாக வந்து மயிலாடுதுறை மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த முட்லூர் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியபோது, நேற்று அந்தப் பெண் சம்பவ இடத்தில் அணிந்திருந்த அதே சேலை, ஜாக்கெட்டுடன் சாலை ஓரம் அமர்ந்திருந்ததை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்தப் பெண் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சிறுதானூர், முள்ளுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜு என்பவரின் மனைவி 25 வயதான துர்கா என்பதும், ஆந்திராவில் இருந்து ஒரு குழுவாக வந்து தங்கி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும், சத்யாவின் கைப்பையில் வைத்திருந்த 18 சவரன் நகைகளை திருடியதும் தெரியவந்தது. பேருந்தில் திருடிய கைப்பையில் 18 சவரன் தங்க நகை இருந்தது தெரிந்ததும் அலர்ட்டான துர்கா, உடனடியாக அந்த நகைகளை தனது சகோதரியிடம் கொடுத்து ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு அனுப்பி விட்டுள்ளார்.
இதனை அடுத்து போலீசார் துர்காவை கைது நீதிமன்றம் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து துர்காவின் சகோதரியின் செல்போன் நம்பரை வாங்கி, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில், தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்ட தனிப்படை போலீசார் 8 பேர் டெம்போ வேனில் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்து துர்காவின் சொந்த ஊருக்கு சென்றனர். அங்கு, போலீசாரின் நடமாட்டத்தை உணர்ந்து தப்பி ஓட முயன்ற துர்காவின் சகோதரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் வீட்டுக்கு சிறிது தூரத்தில், மண்ணில் பள்ளம் தோண்டி பதுக்கி வைத்திருந்த தங்க நகைகளை துர்காவின் சகோதரி போலீசாரிடம் ஒப்படைத்தார். மயிலாடுதுறையில் திருட்டு போன நகைகளை 3 நாட்களாக கண்கொத்தி பாம்பாக கண்காணித்து, ஆந்திராவில் சென்று மீட்டு வந்த போலீசாரை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.