பயணியைத் தாக்கி ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசிய ரயில்வே உணவக ஊழியர்கள்.. உபியில் பயங்கரம்..
தண்ணீர் பாட்டில் வாங்குவது மற்றும் பான் சாப்பிட்டு துப்புவது தொடர்பாகவும் அவருக்கும் ரயில்வே உணவக ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், லலித்பூர் மாவட்டத்தில் ரயிலில் பயணித்த நபரை உணவக ஊழியர்கள் தாக்கி ஓடும் ரயிலில் இருந்து வீசியெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முற்றிய வாக்குவாதம்
ரவி யாதவ் (வயது 26) எனும் இந்தப் பயணி தனது சகோதரியுடன் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்ஸில் முன்னதாக பயணம் செய்த நிலையில், தண்ணீர் பாட்டில் வாங்குவது மற்றும் பான் சாப்பிட்டு துப்புவது தொடர்பாகவும் அவருக்கும் ரயில்வே உணவக ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பாட்டிலை எடுத்து கொடுத்த உணவக ஊழியர் ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய் எனக்கூறினார். ஆனால், பாட்டிலில் 15 ரூபாய் மட்டுமே போட்டிருந்தது. இதை பார்த்த ரவி யாதவ், ”ஏன் 5 ரூபாய் அதிகமாக விற்கிறீர்கள். அதெல்லாம் தரமுடியாது” எனக் கூறியுள்ளார்.
ஆனால், இங்கு விலை இப்படித்தான் என பேன்ட்ரி ஊழியர் கறாராகக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரவி யாதவுக்கும் உணவக ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே, அங்கிருந்து செல்போன் மூலம் தன்னுடன் வேலை பார்க்கும் சக உணவக ஊழியர்களை அந்த நபர் அழைத்து வந்துள்ளார்.
உடனே மேலும் இரண்டு உணவக ஊழியர்கள் ரவி யாதவ் இருந்த பெட்டிக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால், ஒரு கட்டத்தில் அவர்கள் பான் மசாலாவை இளைஞர் மீது துப்பியதாகவும் தெரிகிறது.
தொடர்ந்து இந்த மோதல் கைகலப்பாக மாறியுள்ளது. இதற்கிடையே இளைஞர் இறங்க வேண்டிய லலித்பூர் ரயில்வே நிலையம் வந்த நிலையில், ரவி யாதவ் தங்கை ரயில் பெட்டியில் இருந்து இறங்கியுள்ளார். ஆனால், ரவி யாதவை இறங்க விடாமல் உணவக ஊழியர்கள் பிடித்து வைத்துக்கொண்டதோடு சரமாரியாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பயணி
தொடர்ந்து ரவி யாதவை அடித்து ஓடும் ரயிலில் இருந்து உணவக ஊழியர்கள் தண்டவாளத்தில் அவரைத் தூக்கி வீசிவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கிருந்த உள்ளூர் மக்கள் ரவி யாதவை மீட்டு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று முதலுதவி அளித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஆபத்தான நிலையைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிரிவுகளில் புகார்
இந்நிலையில், பயணி ரவி யாதவின் புகாரின்பேரில் குறிப்பிட்ட உணவக ஊழியர்களின் மீது மூன்று பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்