(Source: ECI/ABP News/ABP Majha)
போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான ஓ யாங் லி-ஹ்சிங், தெற்கு தைவானில் உள்ள ஹோட்டல் அறையில் சனிக்கிழமை காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான ஓ யாங் லி-ஹ்சிங், தெற்கு தைவானில் உள்ள ஹோட்டல் அறையில் சனிக்கிழமை காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதை, தைவானின் மத்திய செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அவரது மரணத்திற்கான காரணம் குறித்து அலுவலர்கள் விசாரித்து வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவத்திற்குச் சொந்தமான தேசிய சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் துணைத் தலைவராக ஓ யாங், இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். பல்வேறு ஏவுகணை தயாரிப்பு திட்டங்களை மேற்பார்வையிடுவதற்காக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது.
வணிக பயணத்திற்காக தெற்கு தைவானுக்கு சென்றுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதைத் தொடர்ந்து சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
நான்சி பெலோசியின் தாய்வான் பயணத்திற்கு முன்னதாக சீனாவின் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது. "தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியாகப் பாதுகாக்க உறுதியான மற்றும் வலிமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும்" என சீன தெரிவித்திருந்தது. கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்க அரசில் உயர் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் தாய்வானுக்கு செல்வது இதுவே முதல்முறை.
பெலோசி தைவானுக்கு வருவதற்கு முன்பே, போருக்குத் தயாராகும் வகையில் சீனா அதன் இராணுவத்தை உயர் எச்சரிக்கையில் வைத்திருந்தது.
அவர் வருகை தந்த அன்றே சீனப் போர்க்கப்பல்கள் தைவான் கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கின. சீனாவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஷான்டாங் (CV-17) சன்யாவின் கடற்படைத் தளத்தை விட்டு வெளியேறியது. கிங்டாவோவில் உள்ள கடற்தளத்திலிருந்து லியோனிங் வெளியேறியது.
நான்சியின் வருகைக்கு ஒரு நாள் கழித்து, தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் 27 சீன போர் விமானங்கள் அதன் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்ததாக அறிவித்தது. சீனக் கடற்படையில் ஆறு J-11 போர் விமானங்கள், ஐந்து J-16 போர் விமானங்கள் மற்றும் 16 SU-30 போர் விமானங்கள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ராணுவம் தனது மிகப்பெரிய இராணுவப் பயிற்சியைத் தொடங்கிய பின்னர், தைவான் ஜலசந்தியில் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக சீனா அறிவித்தது. கடல் மற்றும் தைவான் தீவைச் சுற்றியுள்ள வான்வெளியில் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அறிவித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்