சரக்கு ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை - அம்பத்தூரில் அதிர்ச்சி
அம்பத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த முக்குரும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். அவருக்கு வயது 25. இவர் சென்னையில் உள்ள பாடி பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இதே பாடி பகுதியில் தனியாக அறை ஒன்று எடுத்து தங்கி வந்தவர் சரண்யாஸ்ரீ. அவருக்கு வயது 20. இவர் ஆந்திராவின் விஜயநகரம் பகுதியைச் சேர்ந்தவர்.
ஜெயக்குமாரும், சரண்யாஸ்ரீயும் ஒரே பகுதியில் தங்கி இருந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுளளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சரண்யாஸ்ரீயின் பெற்றோர்கள் நேற்று சரண்யாவை பார்ப்பதற்காக பாடியில் உள்ள அவரது அறைக்கு வந்துள்ளனர். அங்கு சரண்யா இல்லை. பின்னர், அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு நேரில் சென்றுள்ளனர். ஆனால், அங்கும் சரண்யாவை காணவில்லை. சரண்யாவை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், பதற்றத்திற்குள்ளான அவரது பெற்றோர்கள் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது, அம்பத்தூர்- திருமுல்லைவாயில் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு ஆணும், பெண்ணும் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருப்பது சரண்யாஸ்ரீயும், ஜெயக்குமார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், காதல் ஜோடிகளான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், காதல் ஜோடிகளான ஜெயக்குமார் – சரண்யாஸ்ரீ இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் ஜோடிகளான ஜெயக்குமார் – சரண்யாஸ்ரீயின் தற்கொலைக்கு என்ன காரணம்? அவர்களது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனரா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : Today Headlines : பொங்கல் பஸ்...இன்றும் ஆதார் இணைப்பு... ஆஸி., வெற்றி... இன்னும் பல செய்திகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்