Crime: மாணவிகளை கிண்டல் செய்த ஆய்வக உதவியாளர் போக்சோவில் கைது
சேலம் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு அடுத்தடுத்து நடக்கும் பாலியல் தொந்தரவு.
சேலம் மாவட்டம் கீரைபாப்பம்பாடி பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாவது முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் மொத்தம் 14,961 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கருப்பூர் பகுதியை சேர்ந்த வீரவேல் என்பவர் லேப் அசிஸ்டெண்டாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இந்தப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகளை அவ்வப்போது பாடல்பாடி கேலிகிண்டல் செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து பள்ளி மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதா என்பவர் தலைமையில் பெற்றோர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர்கள் லேப் அசிஸ்டெண்ட் வீரவேல் மீது புகார் அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பெற்றோரகள் சம்பந்தப்பட்ட ஆய்வக உதவியாளரை அடித்துவிட்ட நிலையில், கிராம மக்கள் ஒன்று கூடி வீரவேலை சிறை பிடித்துவிட்டனர். இதுதொடர்பாக காவல்துறை ஆணையாளர் லாவண்யா மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், வீரவேலை மீட்டு விசாரணைக்காக சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதை தொடர்ந்து வீரவேல் மற்றும் தலைமை ஆசிரியை சுஜாதா ஆகிய இருவரிடமும் காவல்துறையிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து வீரவேல் மீது பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் நடவடிக்கை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இதே போன்று சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்பாபு என்ற ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.