Crime : தற்கொலைக்கு முயற்சி.. தடுத்து நிறுத்திய 8 வயது மகளை கொன்ற தந்தை.. பதைபதைக்க வைத்த கொடூரம்..
காவல்துறை நடத்திய விசாரணையில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக, கொடூரமான கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீரில் ஒரு கொடூரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. குப்வாரா மாவட்டத்தில் ஐந்து நாள்களுக்கு முன்பு 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறை நடத்திய விசாரணையில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்:
சிறுமியின் தந்தை தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த தந்தை பெற்ற 8 வயது மகளை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கொலை குற்றத்தில் முகமது இக்பால் கட்டனா கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை வழக்கின் விசாரணை அதிகாரி இதுகுறித்து பேசுகையில், "45 வயது இக்பால் ஓட்டுநர் ஆவார். இக்பாலுக்கும் மனைவிக்கும் வழக்கமாக சண்டை நடக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது உயிரை மாய்த்துக் கொள்ள திட்டமிட்டு தோல்வியடைந்த பின்னர் தனது மகளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
கடந்த புதன்கிழமை மாலை, இக்பால் தனது மனைவியுடன் சண்டையிட்டதைத் தொடர்ந்து கத்தியுடன் வீட்டை விட்டு வெளியேறிய முயற்சி செய்துள்ளார். தனது தந்தையை தனியாக செல்ல விடாமல் சிறுமியும் உடன் சென்றுள்ளார். இக்பால் ஓட்டிச் செல்ல முற்பட்ட போது சிறுமியும் அவரது வாகனத்தில் ஏறியுள்ளார்.
லோலாப் பகுதியில் உள்ள குர்ஹாமா கிராமத்தில் இக்பால் தனது வீட்டை விட்டு வெளியேறியபோது, அவரின் நான்கு குழந்தைகளில் ஒருவரான அவரது மகள் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். தந்தை சொன்னபோதிலும் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டார்.
தற்கொலை செய்ய விடாமல் தடுத்த மகள்:
தன்னுடன் வர வேண்டாம் என இக்பால் 45 நிமிடங்களாக தனது மகளை சமாதானம் செய்துள்ளார். இறுதியில், மிட்டாய் வாங்க 10 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், அவர் திரும்பி செல்ல மறுத்துவிட்டார்.
வாகனத்தில் சிறுமியும் இருந்ததால், அவர் முன்னிலையில் எப்படி தற்கொலை செய்து கொள்வது என யோசிருக்கிறார். ஆத்திரத்தில், கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது கழுத்தை அறுத்து, உடலை விறகுக் கொட்டகையில் வீசியுள்ளார். சில மணி நேரம் கழித்து இக்பால் வீட்டிற்கு சென்றார்.
சிறுமி குறித்து குடும்பத்தினர் அவரிடம் கேட்டபோது, அவர் தன்னுடன் வரவில்லை என மறுத்துள்ளார். இக்பாலுடன் சிறுமி செல்வதை குறைந்தது நான்கு பேர் பார்த்ததாக போலீசார் தெரிவித்தனர். தனது மகளைக் கொன்ற பிறகு, தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் தெரிகிறது" என்றார்.
மேலும் படிக்க: CSK vs LSG, IPL 2023 Live: டாஸ் வென்ற லக்னோ பந்து வீச முடிவு; பேட்டிங் செய்யும் சென்னை..!