பெண் பயணியிடம் சில்மிஷம்! வீடியோவால் சிக்கிய கண்டெக்டர்! தட்டித்தூக்கிய போலீஸ்
கர்நாடக மாநிலத்தில் பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடகாவின் முக்கிய துறைமுக நகரமான மங்களூரில் இருந்து மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (KSRTC) பணிபுரியும் மாநில ஒப்பந்த நடத்துனர் ஒருவர் மங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணிடம் சில்மிஷம்:
பொதுப் பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நடத்துனர் ஒருவர் ஒரு பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்ஸ் பெண் பயணிகளில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
சிக்க வைத்த வீடியோ
ஒரு பெண்ணுடன் நடத்துனர் தகாத முறையில் நடந்து கொள்வதை சக பயணி ஒருவர் படம் பிடித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அந்த வீடியோவில், பெண் பயணி ஒருவர் தூங்கி கொண்டிருக்கிறார். நடத்துனர் அந்த பெண்ணின் அருகில் நிற்கிறார். அந்தப் பெண்ணின் தலை குற்றம் சாட்டப்பட்டவரை நோக்கி சாய்ந்திருந்தது. மேலும், நடத்துனர் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மீது சாய்ந்து, பின்னர் அவரது உடலின் மீது தனது கையை வைத்து சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
சக பயணி ஒருவரால் படம்பிடிக்கப்பட்ட வீடியோ பின்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிக்கிய நடத்துனர்:
வீடியோ ஆதாரங்கள் மற்றும் அந்தப் பெண்ணின் முறையான புகாரின் அடிப்படையில், கொனாஜே போலீசார் நடத்துனர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நடத்துநரை போலீசார் கைது செய்தனர்.
நடத்துனர் பாகல்கோட்டைச் சேர்ந்த பிரதீப் காஷப்பா நாயக்கர் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது புதிதாக செயல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 74 மற்றும் 75 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தின் மூலம் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் விரைவான நடவடிக்கை எடுத்து, கேரள போக்குவரத்து கழகம் உடனடியாக பிரதீப் காஷப்ப நாயக்கரை பணிநீக்கம் செய்து ஒழுங்கு விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் சேவைகளை பயணிகள் மிகவும் மதிக்கிறோம். மேலும் சிலரின் நடத்தை நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்
இது முதல் முறை அல்ல:
கர்நாடகாவில் இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இதுபோன்று ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், பெங்களூருவில் அடையாளம் தெரியாத ஒரு நபர் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து தடவுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, தற்போது விசாரணை நடந்து வருகிறது.





















