கராத்தே ஆசிரியரின் பாலியல் தொல்லை மன உளைச்சல்.. 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி.
3 ஆண்டுகளாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
கோவை, கரூரை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில், தனியார் பள்ளி கராத்தே ஆசிரியர் 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், மன உளைச்சல் அடைந்த பிளஸ் டூ மாணவி மணிக்கட்டில் அறுத்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். பள்ளி தாளாளர் உள்பட இரண்டு பேரை போக்சோவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை தாலுக்கா கரியலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி கடந்த 22 ஆம் தேதி இரவு, தனது வீட்டில் மணிக்கட்டில் அறுத்தும், சேலையில் தூக்கிட்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அவரது பெற்றோர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது, மாணவி பேச்சு மூச்சின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது
இதுபற்றி மாணவியிடம் பெற்றோர் விசாரித்ததில் படித்துவரும் பள்ளியில் கராத்தே மாஸ்டர் வேலை பார்த்து வரும் ராஜா என்பவர் அந்த மாணவிக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்தது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து மாணவி, கடந்த 10 நாட்களாக வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் தன் மணிக்கட்டில் அறுத்துக்கொண்டு தூக்கிட்டு தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் திரண்டு வந்து சேலம் எஸ்பி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும், கராத்தே மாஸ்டர் மீதும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ராஜா கடந்த 3 ஆண்டுகளாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மாணவி தனது வகுப்பு ஆசிரியரிடம் கராத்தே ஆசிரியர் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் கனஅடியாக பள்ளி உரிமையாளரும், தாளாளருமான ஸ்டீபன் தேவராஜன் புகார் தெரிவித்தார். ஆனால் பள்ளி நிர்வாகம் ராஜா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரியவருகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராஜா மீண்டும் தனது பாலியல் தொல்லைகளைத் தொடங்கியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணை ராஜா பல மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்து வருவது தெரியவந்துள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட மாணவியரின் உறவினர்கள் கராத்தே மாஸ்டர் சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050