சுபஸ்ரீக்கு எழுப்பப்பட்ட நியாயம்... தினேஷிற்கு மறைக்கப்பட்டது ஏன்? ஆட்சி மாறினாலும் மாறாத காட்சி!
ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் பேனர்கள் வைப்பதும், வழிநெடுகிலும் கொடிகள் கட்டுவதும் கோலாகலமாக செய்யப்படுகிறது.
விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நடைப்பெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10 க்கும் மேற்ப்பட்டவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அதில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அச்சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்ப்பட்டு வருவதால் அங்கு அதிக அளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. அப்போது பணியில் ஈடுப்பட்டு இருந்த சிறுவன் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உராசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டான்.
படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். நெடுஞ்சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர் கொடி கம்பங்கள் வைப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதோடு உயிரிழப்புகளும் ஏற்படுவதை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியில் பேனர்கள் வைக்கவும் கொடி கம்பங்கள் வைக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது.
ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் கலாசாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. அதை அகற்றாத
காவல் துறை மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால் சிறுவன் பலியானது அனைவரது மத்தியில் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.
பேனர் தடைக்கு பின்னணியில் இருந்தது சுபஸ்ரீ கொலை. விபத்து என்றாலும் அது கொலையாக தான் பார்க்கப்பட்டது. கடந்த 2019ல் பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் வீட்டு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர், அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகள், நடிகர் விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எல்லாம் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். ஒட்டு மொத்த தமிழ்நாடும் அந்த சம்பவத்தை கண்டித்தது. அதனால் அன்று சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்தோடு பேனர்கள் மீதான தடைக்கும் அது காரணமானது. அதன் பின் தமிழ்நாட்டில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் அது கடைபிடிக்கவும் செய்யப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் பேனர்கள் வைப்பதும், வழிநெடுகிலும் கொடிகள் கட்டுவதும் கோலாகலமாக செய்யப்படுகிறது. இந்நிலையில் தான் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்க வந்த நிகழ்ச்சியில் கொடி கட்டும் பணியில் இருந்த சிறுவன் பரிதாபமாக மின்சாரம் தாக்கி பலியாகியிருக்கிறார். சுபஸ்ரீக்கு எழுப்பப்பட்ட நியாயம், தினேஷிற்கு மறுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அப்படியே திருப்பி போடும் வேலை தான் நடக்கிறதே தவிர, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் எந்த முயற்சியும் நடைபெற வில்லை. குறைந்த பட்சம் நீதிமன்ற உத்தரவையாவது பின்பற்றினார்களா என்றால், அதுவும் இல்லை. காட்சி மாற்றத்திற்காக தான் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. ஆனால், ஆட்சி மாறும் காட்சி மாறவில்லை என்பது தினேஷிற்கு மறுக்கப்பட்ட நீதி.