திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி நகைகளை களவாடிய களவாணிகள்! கும்பாபிஷேக விழாவில் பரபரப்பு!
மயிலாடுதுறையில் சியாமளா தேவி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் பல பக்தர்களிடம் தங்க நகை பறிப்பில் மர்ம நபர்கள் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த சியாமளா தேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மயிலாடுதுறை காவல் தெய்வங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. பழமைவாய்ந்த இந்த ஆலயத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை அடுத்து நேற்று முன்தினம் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கியது நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து கர்ப்பகிரகத்தில் உள்ள அம்மனுக்கு புனித கடங்களின் நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.
Pride Month 2022 : LGBTQAI+ கொடியின் அர்த்தம் தெரியுமா ? பிரைட் மாதத்தின் வரலாறு தெரிஞ்சுக்கோங்க!
இந்நிலையில், இந்த கும்பாபிஷேக திருவிழாவில் மயிலாடுதுறை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி, சிறுவர்கள் உட்பட 8 பெண்களிடம் 19 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். நகை காணாமல் போனதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
மேலும் மயிலாடுதுறைச் சேர்ந்த பாப்பாத்தி, தேவிகா, நவநீதம், ஜோதி, மூதாட்டி லட்சுமி உட்பட 8 பெண்களிடம் தாலிச் செயின், செல்போன்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் மயிலாடுதுறை காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.