Sathankulam murder : சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு.. முக்கிய சாட்சியான அரசு மருத்துவர் சாட்சியம்.. சொன்னது என்ன?
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முக்கிய சாட்சியான அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மகன் கொலை வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் அழைத்து சென்றனர். சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முருகன், முத்துமுருகன் உள்பட 9 போலீஸ்காரர்கள் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி பத்மநாபன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சாட்சியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. எதிர்தரப்பினரும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியாக அரசு டாக்டர் பாலசுப்பிரமணியன் கருதப்படுகிறார். அவர் கோர்ட்டில் ஆஜராகி கூறியிருப்பதாவது, படுகாயங்களுடன் ஜெயராஜும், பென்னிக்சும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்தேன். அப்போது இந்த காயங்கள் ஏற்பட்டது எப்படி என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள் இருவரும், சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் வைத்து எங்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். இதில் நாங்கள் இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளோம். போலீசாரின் தாக்குதலால்தான் இந்தநிலைக்கு ஆளாகியுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்ததாக டாக்டர் பாலசுப்பிரமணியன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அடுத்ததாக வருகிற 5-ந் தேதி அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சு புகழ்வாசுகி என்பவர் சாட்சியம் அளிக்கிறார். இதற்கிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். ஆனால் அவரும் இந்த இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளி ஆவார். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரவிச்சந்திரனுக்கும் தொடர்பு உள்ளது. எனவே அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்து உரிய விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்த இரட்டைக்கொலை வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள தலைமைக்காவலர் முருகன் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார்.