POCSO | 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்சோ சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 ( pocso act 2012 )
இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(pocso) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
போக்சோ சட்டத்தின் பொது அம்சங்கள்:
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்,வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும். இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
குழந்தையின் நலனே பிரதானமாக கொண்டுள்ள போக்சோ சட்டம்
வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று இச்சட்டம் கூறுகிறது. உதாரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமி,சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது. இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது.
குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவுசெய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்,உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.
வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக்கூடாது. குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப்படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது. என பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனை பிரதானமாக கொண்டுள்ள போக்சோ சட்டம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்