சேலத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்
சேலத்தில் லாரிகளில் கடத்தப்பட்ட 7.3 டன் அளவில் ரூபாய் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் இன்று காலை பறிமுதல் செய்தனர்.
சேலம் அம்மாபேட்டை புறவழிச்சாலையில் போலீசார் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இனறு காலை இரண்டு லாரிகளில் மாட்டுத்தீவனங்கள் ஏற்றிக்கொண்டு வரப்பட்டது. அந்த லாரியை போலீசார் நிறுத்தி லாரி ஓட்டுநர்களிடம் விசாரித்தனர், அப்போது, லாரி ஓட்டுநர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் லாரிகளில் இருந்த மாட்டுத்தீவன மூட்டைகளை நன்றாக பரிசோதனை செய்தனர். அப்போது, மாட்டுத்தீவன மூடைகளுக்கு மத்தியில் குட்கா பொருட்கள் மறைத்து கொண்டுவரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் 7.3 டன் அளவிற்கு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூபாய் 1 கோடி ஆகும். லாரி ஓட்டுநர்களை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்கா பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஏற்கனவே மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த சூழலில், இன்று ரூபாய் 1 கோடி மதிப்பிலான குட்கா பொருட்கள் லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.