Haryana Clashes: மணிப்பூரே ஓயல...கலவர பூமியான ஹரியானா...மசூதிக்கு தீ வைத்து எரிப்பு...உண்மையில் என்னதான் காரணம்?
ஹரியானா மாநிலத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், பள்ளிவாசலை எரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Haryana Clashes: ஹரியானா மாநிலத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், பள்ளிவாசலை எரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வடகிழக்கு இந்தியாவும், வட இந்தியாவுக்கு கலவர பூமியாக மாறி வருகிறது. முதலில் மணிப்பூர் வன்முறை இரண்டு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து, கொடூர சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இன்னும் அங்கு நிலைமை கட்டுக்குள் வராத நிலையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் புது கலவரம் ஒன்று வெடித்துள்ளது.
திடீரென வெடித்த கலவரம்:
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதாவது, ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி கேட்லா மோட் பகுதியில் நடந்து கெண்டிருக்கும்போது, இளைஞர்கள் குழு ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் அங்கு இருதரப்பினருக்கும் இடைய பெரும் மோதல் வெடித்தது. ஒருவரைக்கொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறையால் இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில், இணைய சேவையும் முடக்கப்பட்டிருக்கிறது. இந்த வன்முறை குருகிராம் மாவட்டத்திற்கும் பரவியது.
மசூதி எரிப்பு:
இது சம்பந்தமான ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலையும் ஹரியானா போலீஸ் தெரிரிவித்துள்ளது. அதாவது, குருகிராம் பகுதியில் உள்ள மசூதியை இன்று அதிகாலை 50 பேர் கொண்ட கும்பல் தீ வைத்து எரித்து, மசூதி இமாமை கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளதாக ஹரியானா போலீஸ் தெரிவித்துள்ளது. மசூதியில் இமாம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பதை குருகிராம் எம்பி ராவ் இந்தர்ஜித் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மசூதியை எரித்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வழிபாட்டு தளங்களை சுற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் என்ன காரணம்?
இந்த வன்முறை சம்பவங்களில் பஜ்ரங் தள் பிரமுகர் மோனு மானேசர் பெயர் அதிமாக அடிப்பட்டு வருகிறது. மோனு மானேசருக்கு ஹரியானா வன்முறைக்கும் என்ன தொடர்பு? கடந்த சில மாதங்களுக்கு முன், இரண்டு முஸ்லிம்கள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி மோனு மானேசர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜூனைத், நசீர் ஆகிய இருவரையும் படுகாலை செய்தவர் மோனு மானேசர் என்று கூறப்படுகிறது. இவரை கைது செய்ய போலீசார் தீவிரமான முயற்சி எடுத்தும் பயன் அளிக்கவில்லை. போலீசாரிடம் தப்பியோடுவதையே மோனு தொடர்ந்து செய்து வந்தார். குற்றஞ்சாட்டப்பட்ட மோனு மானேசர், ஹரியானவில் நடந்த பேரணியில் பெருந்திரளாக இந்துக்கள் பங்கேற்க வேண்டும் என வீடியோக்கள் மூலம் அழைத்து விடுத்து வந்தார். மோனு மானேசர், நுஹ் மாவட்டத்தில் நேற்று நடந்த பேரணியில் பங்கேற்பதாக வதந்தி பரவியதே வன்முறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.