Yuvaraj full details : ‛ஈவு இரக்கம் இல்லாத கொலை முதல் ஈமு கோழி மோசடி வரை’ யார் இந்த ‛வாட்ஸ் ஆப்’ யுவராஜ்!
பொதுமக்கள் வாட்ஸ்அப், பேஸ்ஃபுக் போன்ற சமூக வலைத்தளங்களை பெரிதும் அறியாத காலக்கட்டத்தில் தன் புகழை அதன் மூலம் பரப்பியவர் யுவராஜ்.
பொறியியல் பட்டதாரி கொகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 5 பேரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 8-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தது.
அதில், யுவராஜ், அருண் - யுவராஜின் கார் ஓட்டுநர், குமார் (எ) சிவக்குமார், சதீஸ்குமார், ரகு (எ) ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திர சேகர், பிரபு, கிரிதர் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.மேலும், சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை (யுவராஜ் சகோதரர்), சுரேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விவரங்களும் வரும் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், A1 குற்றவாளியான யுவராஜ் பற்றிய தகவலை கீழே காணலாம் :
யார் இந்த யுவராஜ்?
சேலம் – கோயம்புத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள மஞ்சக்கல்பட்டிதான் யுவராஜின் சொந்த ஊர். இவர் பி.சி.எஸ். படித்துவிட்டு விவசாயம் செய்து வந்தார். பின்னர், வங்கியில் கடன் வாங்கி ஜே.சி.பி ஒன்றை வாங்கியதாகவும், அந்த ஜே.சி.பியை விற்றுவிட்டாரா, காணாமல் போனதா என்பது இதுவரை தெரியவில்லை.
அதன்பிறகு, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியைச் செய்துவந்தார். இதைத் தொடர்ந்து, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையில் 2008-ல் சேர்ந்தார். அதில் இருந்தே பரபரப்பு புகார்களில் இவர் பெயர் தொடர்ந்து அடிபட தொடங்கியது. இருவருக்குள் சில ஆண்டுகளில் மோதல் ஏற்படவே, யுவராஜ் 2011-ல் தனியரசுவின் கட்சியில் இருந்து விலக்கினார். அதே காலக்கட்டத்தில் சுவிதா என்ற பெண்ணை யுவராஜு திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து, அடிதடி, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என ஏராளமான பிரிவுகளில் சங்ககிரி, குமாரபாளையம், கரூர், திருச்செங்கோடு, பெருந்துறை உள்ளிட்ட காவல் நிலையங்களில் யுவராஜ் மீது வழக்குகள் பதிவாகின.
‘ஈமு எதிர்ப்பு சங்கம்’ என்று ஆரம்பித்தார். ஈமுவை எதிர்க்கிறாரா, இல்லை ஈமு அதிபர்களை வளைக்கிறாரா என்ற சந்தேகம் பலருக்கும் வந்தது. இது சம்பந்தமாக அவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு, கைதும் செய்யப்பட்டார். பிறகுதான், ‘தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை’ என்று ஆரம்பித்தார். கர்நாடகாவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார் யுவராஜ். ஆனால், சட்டப்படிப்பை முடிக்கவில்லை.
‘‘திருச்செங்கோடு பகுதியையே தன் கலாசாரக் கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தார். இளம் வயது ஆணும் பெண்ணும் ஜோடியாக நடந்து சென்றால், அவர்களைப் பிடித்து விசாரிப்பது, இருவரும் வேறு வேறு சாதியினராக இருந்தால், அவர்களை மிரட்டி, அடித்து உதைப்பது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இதற்கென தனியாக ஓர் இளைஞர் படையை வைத்திருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. மேலும், எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு தொல்லை கொடுத்த பின்னணியில் இவரும் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
தன்னுடைய சாதி மக்களுக்கு நல்லது செய்பவர்போல அவருக்கு உருவம் கிடைத்தது. சேலம், கரூர், நாமக்கல் பகுதிகளில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதில் தலையிட்டுத் தீர்த்துவைக்கும் நிலைக்கு மாறினார். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்கள் மூலமாகவும் தன் புகழைப் பரப்பினார். கொங்கு கவுண்டர் சமுதாயத்துக்காக அதுவரை செயல்பட்டு வந்த ஈஸ்வரன், தனியரசு ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை யுவராஜ் பயன்படுத்திக்கொண்டார். ‘‘பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்த கோகுல்ராஜும், சுவாதியும் நண்பர்கள். சுவாதியின் உறவினர் ஒருவர், யுவராஜின் அமைப்பில் இருந்தார். அவர்தான், கோகுல்ராஜ் – சுவாதி விவகாரத்தை யுவராஜின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். பிறகுதான், கோகுல்ராஜை கடத்திச் சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜை போலீஸார் தேடத் தொடங்கியதும் தலைமறைவாகி விட்டார். அந்த வழக்கின் விசாரணை அதிகாரி விஷ்ணுப்ரியாவை போனில் தொடர்புகொண்டு, வழக்கு சம்பந்தமாகவே பேசிய ஆடியோவை எடிட் செய்து சில தினங்களிலேயே வெளியிட்டார்.
அன்றைய காலத்தில் பொதுமக்கள் வாட்ஸ்அப், பேஸ்ஃபுக் போன்ற சமூக வலைத்தளங்களை பெரிதும் அறியாத காலக்கட்டத்தில் தன் புகழை அதன் மூலம் பரப்பியவர். வாட்ஸ்அப் என்ன என்றே அறியாத அப்பொழுதே அதன் மூலம் ஆடியோவை பரப்பி மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு மட்டுமல்லாது, தமிழ்நாட்டை உலுக்கிய ஈமு கோழி மோசடி வழக்கிலும் யுவராஜ் மீது புகார் எழுந்து, 10 ஆண்டு சிறையும் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்