கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு: மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு தள்ளுபடி
நடிகை சாந்தினியை கர்ப்பமாக்கி ஏமாற்றி கைதான வழக்கில் ஜாமின் கேட்டு மாஜி அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாடோடிகள் புகழ் நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இன்று மனு விசாரணைக்கு வந்த நிலையில், மணிகண்டனின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னதாக, தமிழ் சினிமா நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படியில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் பாலியல் பலாத்காரம், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு என பிரிவு 313, பிரிவு 323, பிரிவு 417, பிரிவு 506 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார். தன்னுடன் மூன்று ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்ததாகவும், அவரால் தான் மூன்று முறை கருவுற்றதாகவும், அவரது கட்டாயத்தினால் அந்த கருவை கலைத்ததாகவும் புகாரில் தெரிவித்தார்.
இதற்கிடையே, முன்ஜாமீன் கோரி அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் அமைச்சர் என்பதால் மணிகண்டன் ஆதாரங்களை அழிக்க நேரிடும் என்பதால் முன்ஜாமீன் வழங்க நடிகை சாந்தினி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து, மணிகண்டன் தலைமறைவானார். மதுரை,ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த மணிகண்டனை பிடிக்கும் முயற்சியில் சென்னை காவல்துறை தீவிரப்படுத்தியது. இதற்காக, 2 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி காலை பெங்களூரில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சிறப்பு தனிப்படை கைது செய்தது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே இவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதுடன், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், புகார் அளித்த நாடோடி புகழ் நடிகை சாந்தினி. முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் புகார் அளித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.