(Source: ECI/ABP News/ABP Majha)
வருமானத்துக்கு அதிகமாக சொத்து? - முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
முன்னாள் அமைச்சர் காமராஜின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் காமராஜ். திருவாரூரில் இவருக்கு சொந்தமான வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
காமராஜின் வீடு மற்றும் அலுவலகங்கள் மட்டுமின்றி அவரது இரண்டு மகன்களாகிய டாக்டர் இன்பன் மற்றும் டாக்டர் இனியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காமராஜ்ல மற்றும் அவரது மகன்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தஞ்சை பூக்கார வஸ்தா தெருவில் உள்ள காமராஜின் சம்பந்தியாக டாக்டர் மோகன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி காமராஜின் உறவினர்கள் மற்றும் நண்பர்களாகிய சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது இரு மகன்கள், அவரது சம்பந்தி உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காமராஜ், அவரது மகன்கள் மற்றும் அவரது சம்பந்தி வீடு, அலுவலகங்கள் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரும், காமராஜின் ஆதரவாளர்களும் அங்கு குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு அந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க : DVAC Raid : மகன்களோடு வசமாக சிக்கிய காமராஜ்: யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு? முழு விபரம்
மேலும் படிக்க : பதவியை தவறாக பயன்படுத்தி ரூ.58 கோடியை அபேஸ் செய்த முன்னாள் அமைச்சர்: எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்