மயிலாடுதுறை: காவல் நிலையங்களில் குவியும் குடும்ப பிரச்சினைகள்..! தீர்வுக்கு வழி சொல்லும் சமூக ஆர்வலர்கள்..
12 லட்சம் மக்கள் வாழும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு குடும்ப நல ஆலோசனை மையம் (Family Counseling Centre) அமைப்பது காலத்தின் கட்டாயம் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை: புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளை விசாரிக்கும் காவல் நிலையங்கள், இன்று குடும்பப் பிரச்னைகள் மற்றும் மணவாழ்வு முரண்பாடுகளைத் தீர்க்கும் மையங்களாக மாறிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தின் 14 காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும், சிறிய கருத்து வேறுபாடுகள் முதல் மணமுறிவு நோக்கிய சண்டைகள் வரை அதிக அளவில் பதிவாகி வருவதால், இவற்றைக் கையாள ஒரு பிரத்யேக குடும்ப நல ஆலோசனை மையம் (Family Counseling Centre) அமைப்பது காலத்தின் கட்டாயம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.
காவல்துறையின் பணிச்சுமை: சுமூகத் தீர்வு கிடைப்பதில் சிக்கல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றங்கள், பாலியல் அத்துமீறல்கள் போன்ற முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பில் இருக்கும் மகளிர் போலீசார் மற்றும் இதர அதிகாரிகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான புகார்களையும் அதிக அளவில் கையாள வேண்டியுள்ளது.
சட்டத்தைக் கடந்த சவால்கள்
"குடும்பப் பிரச்னைகள் மற்றும் கணவன்-மனைவிக்கு இடையேயான சண்டைகள், பெரும்பாலும் சட்ட ரீதியானவை அல்ல, உளவியல் ரீதியானவை. இந்த உணர்வுப்பூர்வமான பிரச்னைகளை, குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் அதே அணுகுமுறையுடன் கையாளும்போது, சில சமயங்களில், சுமூகமான தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் மேலும் வழக்குகளாக மாறி நீதிமன்றத்தை நோக்கிச் செல்கின்றன," என்று சமூக நல ஆர்வலர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
காவல்நிலைய விசாரணையின்போது, சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டிருக்கும் தம்பதியினர் பிரிந்து செல்வதற்கும், நிரந்தர விவாகரத்துக்கு மனு செய்வதற்கும் முடிவெடுக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால், இருவரது வாழ்க்கையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
ஆலோசனை மையம் ஏன் அவசியம்?
இந்தச் சிக்கலான சூழலைத் தவிர்க்க, மயிலாடுதுறை மாவட்டத்தில், காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்வதற்கு முன்னரே, பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனை வழங்கப்படும் ஒரு மையம் தேவைப்படுகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்யிடம் சமூக ஆர்வலர் சங்கமித்திரன் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த மனுவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- மக்கள் தொகைக்கு ஏற்ப சேவை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரத்யேக மையம் அவசியம்.
- ஆலோசனை வழியே சமாதானம்: காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மகளிர் போலீசாரும், அதிகப்படியான குடும்பப் பிரச்னைகளைக் கவனிக்கும்போது, சில வழக்குகள் அவசரமாகப் பதிவு செய்யப்படவோ அல்லது தவறாக வழிநடத்தப்படவோ வாய்ப்புள்ளது.
- விவாகரத்து விகிதத்தைக் குறைத்தல்: ஒரு முறையான ஆலோசனை மையத்தில், உளவியல் நிபுணர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இணைந்து செயல்பட்டால், தற்காலிக மனக்கசப்புகளால் விவாகரத்து நாடும் தம்பதியினருக்குச் சரியான வழிகாட்டுதல் வழங்கி, அவர்களின் குடும்பங்களை மீண்டும் இணைக்க முடியும். இதன்மூலம், விவாகரத்து விகிதமும், அதன் விளைவாக ஏற்படும் சமூகப் பிரச்சினைகளும் குறையும்.
குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்திற்கு அனுப்புவது என்பது சமூகத் தீர்வு அல்ல. மாறாக, சமூகப் பிரச்சினைகளுக்குச் சமூகத் தீர்வைக் காண்பதுதான் சரியானது.
"சட்ட விதிமுறைகளின்படி செயல்படும் மகளிர் போலீஸ் நிலையங்கள், குற்றவியல் கோணத்தில்தான் பல பிரச்னைகளைக் கையாள வேண்டியுள்ளது. ஆனால், குடும்ப நல ஆலோசனை மையம் என்பது, முழுக்க முழுக்கப் பேச்சுவார்த்தை, மத்தியஸ்தம் மற்றும் மனநல ஆலோசனைகள் மூலம், மன முரண்பாடுகளை நீக்கி, உணர்ச்சித் தௌிவை ஏற்படுத்தி, குடும்ப உறவுகளைப் பலப்படுத்தும் பணியைச் செய்யும். இதுதான் 12 லட்சம் மக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் சரியான வழி," என்று அவர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு, இந்த அவசரத் தேவையைக் கருத்தில்கொண்டு, குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளைச் சுமூகமாகத் தீர்க்கும் நோக்கத்துடன், விரைவில் குடும்ப நல ஆலோசனை மையத்தை உருவாக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாகும்.





















