மயிலாடுதுறையில் பேராசிரியர்கள் வீட்டில் 20 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை! லாக்கரை தூக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவம்..!
மயிலாடுதுறையில், கல்லூரிப் பேராசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த 150 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கரை அப்படியே தூக்கிச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மயிலாடுதுறையில், கல்லூரிப் பேராசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த 150 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கரை அப்படியே தூக்கிச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த லாக்கரில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடுபோனதோடு, வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் கொள்ளையர்கள் ஓட்டிச் சென்றது மயிலாடுதுறை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆளில்லா வீட்டை குறிவைத்த கொள்ளையர்கள்
மயிலாடுறை டவுன்ஸ்டேஷன் சாலை, சாரதா நகர் 2-வது தெருவில் வசித்துவரும் மணிகண்டன் மற்றும் விஜயா தம்பதியினர் இருவரும் கல்லூரிப் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) குடும்பப் பணியாக திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். வீட்டில் யாரும் இல்லாததை உறுதிசெய்துகொண்ட கொள்ளையர்கள், நள்ளிரவில் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
இன்று காலை, மணிகண்டனின் தந்தை ஹரிஹரன், அருகாமையில் வசிப்பவர் என்பதால், மகனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உடனடியாக அவர் மயிலாடுதுறை நகரக் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.
லாக்கருடன் மாயமான நகை மற்றும் வாகனம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டில் நடந்த கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், திருச்சியில் இருந்து திரும்பிய மணிகண்டன்-விஜயா தம்பதியினர், வீட்டு கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, சுமார் 150 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கரே காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அந்த லாக்கருக்குள், சுமார் 22 சவரன் அளவிலான தங்க நகைகள் (மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம்) மற்றும் ஒரு கிலோவுக்கு மேலான வெள்ளிப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
கொள்ளையர்களின் துணிகரம் இதோடு நிற்கவில்லை. அவர்கள், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த ஆக்டிவா இருசக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். லாக்கரை எடுத்துச் செல்ல வாகனத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
விசாரணை விபரம்: சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்கள், கைரேகைகள் மற்றும் இதர தடயங்களைச் சேகரித்தனர். மேலும், வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர்கள் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாக்கரைத் தூக்கிச் சென்றதைக் கருத்தில் கொண்டு, இந்த கொள்ளை சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் யூகித்துள்ளனர்.
தொடரும் கொள்ளை
பேராசிரியர் வீட்டில் நடந்த துணிகரக் கொள்ளை குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, மயிலாடுதுறையில் அதற்கு முந்தைய இரவில் நடந்த மற்றொரு கொள்ளைச் சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு, மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோவிலின் இரண்டு கதவுகளின் பூட்டுகளையும் உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 5 கிராம் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து இரு தினங்களில், வீட்டின் லாக்கரைத் தூக்கிச் சென்றது மற்றும் கோவிலில் நகையைத் திருடியது என தொடரும் திருட்டுச் சம்பவங்களால் மயிலாடுதுறை மக்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இரண்டு நாட்களில் நடந்த இந்தத் தொடர் கொள்ளை சம்பவங்கள், நகரில் சட்டம்-ஒழுங்கு பலவீனமாக உள்ளதையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, இவ்வளவு பெரிய லாக்கரைத் தூக்கிச் செல்லும் அளவுக்குக் கொள்ளையர்கள் துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். இரவு நேரங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும், மக்களை அச்சத்திலிருந்து மீட்கவும் காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறையினர், கொள்ளையர்களை விரைவில் பிடித்து, திருடுபோன பொருட்களை மீட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.





















