போலி ரெம்டெசிவிர் ஆனாலும் குணமான நோயாளிகள்!
மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரையில் 1200 மருந்துகளை விற்பனை செய்துள்ளனர். அதில் இந்தூரில் 700 மருந்துகளும், ஜபல்பூரில் 500 மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் பதுக்கல் மற்றும் போலி மருந்துகள் தயாரிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தை சேர்ந்த கும்பல் ஒன்று போலி ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்து அதனை விநியோகம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் ஜபல்பூரில் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை அம்மாநில காவல்துறை அதிகாரிகள் கைது செய்து , அவர்களிடம் இருந்த ஆயிரக்கணக்கான போலி ரெம்டெசிவிர் மருந்துகளை கைப்பற்றியுள்ளனர்
கைதானவர்கள் மீது கொலை வழக்குகளை பதிவு செய்ய வேன்டும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், போலி ரெம்டெசிவிர் மருந்தினை பயன்படுத்திய நோயாளிகளில் 90 சதவீதம் பேர் ,தீவிர நுரையீரல் தொற்றிலிருந்து மீண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் போலி ரெம்டெசிவிர் பயன்படுத்தியவர்களின் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.மேலும் போலி ரெம்டெசிவிர் மருந்தில் குளுக்கோஸ் மற்றும் உப்புக்கலவை இருப்பதாக தெரிவித்த காவல்துறை, தாங்கள் நிபுணர்கள் இல்லை, இதனை மருத்துவர்கள் கருத்தில் கொண்டு தெளிவுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரையில் 1200 மருந்துகளை விற்பனை செய்துள்ளனர். அதில் இந்தூரில் 700 மருந்துகளும், ஜபல்பூரில் 500 மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மருந்துகளை பயன்படுத்தியவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் என மாவட்ட ஐஜி ஹரி நாரயண்ச்சாரி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மோசடியில் ஈடுபட்டவர்களின் கடைசி நபர் சிக்கும் வரை விசாரணையின் தீவிரம் அதிகரிக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், போலி மருந்துகளை செலுத்துக்கொண்டவர்களின் முழுமையான விவரங்களை பெறுவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்தினால் கடுமையான நோய்த்தொற்றிலிருந்து விடுபடலாம் ,தவிற அதனால் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என்பதற்கு சான்று இல்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நாட்டில் ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது . பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சத்து 46 ஆயிரத்து 809-இல் இருந்து 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 207-ஆக உயர்ந்துள்ளது