Thoothukudi DMK functionary Murder : ’மகளை தொந்தரவு செய்தவர் மீது போலீசில் புகார் கொடுத்த திமுக நிர்வாகி’ வெட்டிக் கொலை..!
தனது மகளை தொந்தரவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக கிளை செயலாளர் கண்ணன் போலீசில் புகார் கொடுத்த நிலையில், அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்
தன் மகளை தொந்தரவு செய்தவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்த தூத்துக்குடியில் திமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி பாலதண்டாயுதநகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் கண்ணன் (49). டெய்லரான இவர் தாளமுத்துநகர் பிரதான சாலையில் தையல் கடை நடத்தி வந்தார். மேலும் அந்த பகுதி திமுக கிளை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கண்ணனின் அண்ணன் பாலசுப்பிரமணியன் என்பவரின் மாமியார் இறந்ததையொட்டி16-ம் நாள் நிகழ்ச்சி அந்த பகுதியில் நடந்துள்ளது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் மகன் ஜெயேந்திரன், முத்துப்பாண்டி மகன் ரமேஷ்கண்ணன் மற்றும் ஒருவர் என 3 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். இதனை கண்ணன் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கண்ணனின் மகள், சக பள்ளி மாணவியருடன் பள்ளி முடிந்த பிறகு மணிகண்டன் என்பவரின் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாராம். ஆட்டோ பாலதண்டாயுதநகர் சக்திவிநாயகர் கோயில் அருகே வந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஆட்டோவை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து மாணவிகளை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, ஆட்டோ டிரைவர் மணிகண்டன், கண்ணன் ஆகியோர் சக்திவிநாயகர் கோயில் அருகே நின்று கொண்டிருந்த அந்த 3 பேரையும் சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக கண்டித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்குமாறு மணிகண்டனிடம் கூறிவிட்டு கண்ணன் சென்று விட்டாராம். அதன்பேரில் மணிகண்டன், அவர்கள் மூவர் மீதும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 24 ஆம் தேதி இரவு தாளமுத்துநகர் பிரதான சாலையில் உள்ள தனது கடையில் கண்ணன் இருந்தாராம். அப்போது அங்கு வந்த ஜெயேந்திரன், ரமேஷ்கண்ணன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கண்ணனை சரமாரியாக அரிவாள், கத்தியால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஜெயேந்திரன், ரமேஷ்கண்ணன் உள்ளிட்ட 3 பேர் மீதும் தாளமுத்துநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி வியாபாரிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று காலையில் தாளமுத்துநகர் பகுதி வியாபாரிகள் அனைவரும் தங்களது கடைகளை அடைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வியாபாரிகள் மற்றும் கண்ணனின் உறவினர்கள் தாளமுத்துநகர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது. அந்த வழியாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஏடிஎஸ்பி இளங்கோவன், டிஎஸ்பி கணேஷ் மற்றும் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் ஜெயேந்திரன், ரமேஷ்கண்ணன் ஆகிய 2 பேரையும் தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து காலை 9.30 மணி முதல் பகல் 12 மணி வரை சுமார் இரண்டரை மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து தாளமுத்துநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதில் தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த கௌதம் கண்ணன் தப்பி ஓடியுள்ளார் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.