Crime: ஜல்லிக்கட்டு காளைக்காக உறவினர்கள் இடையே மோதல்; ஒருவர் கொலை - 2 பேர் கைது
ஜல்லிக்கட்டு காளைக்காக உறவினர்கள் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பூவாளூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 50). இவர் தற்போது தனது மனைவி லட்சுமியின் சொந்த ஊரான திருச்சியை அடுத்த புங்கனூர் கிராமத்தில் கீழத்தெருவில் வசித்து வந்தார். ராம்ஜிநகரில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த அவர் தற்போது ரேசன் கடையில் தற்காலிக ஊழியராக இருந்தார். அதுமட்டுமின்றி கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இவர்களுக்கு பிரசாந்த் (27) என்ற மகன் உள்ளார். ஜல்லிக்கட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரசாந்த் ஜல்லிக்கட்டு காளையும் வளர்த்து வருகிறார். இதேபோல் அவர்களது உறவினர்களான புங்கனூர் மேலத்தெருவை சேர்ந்த முத்துவீரன் மகன்கள் சரத் குமார் (26), ரஞ்சித் (24) ஆகியோரும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று இரவு 10 மணி அளவில் புங்கனூர் அல்லித்துறை மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு பிரசாந்த் தனது தந்தை தமிழரசனுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்களான சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரும் பிரசாந்தை பார்த்து நீ என்ன ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறாய்? உனது காளை ஆட்டுக்குட்டி போல உள்ளது. உனது மாட்டை எளிமையாக அடக்கி விடுவோம் என்று கேலி, கிண்டலாக பேசியுள்ளனர். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பிரசாந்த் அவர்களை கடுமையாக கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனை தடுக்க வந்த தமிழரசனுக்கு நெஞ்சில் பலத்த அடி விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்து விழுந்தார்.
மேலும் உடனடியாக அவரை மகன் பிரசாந்த் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழரசன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரசாந்த் மற்றும் பூவாளூரை சேர்ந்த அறிவழகன் ஆகியோர் சோமரசம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். மேலும் கொலையுண்ட தமிழரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணை மேற்கொண்டு சகோதரர்களான சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு காளைக்காக உறவினர்கள் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்