Crime: படிப்படியாக குறைந்த பேச்சு.. பெண் மீது பெட்ரோல் வீச்சு.. தீ வைத்த கொடூரன் மீதும் பரவிய நெருப்பு!
திருவனந்தபுரம் அருகே பெண் ஒருவர் மீது அவரது நண்பர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை அடுத்த திருவனந்தபுரம் அருகே உள்ள சேங்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சரிதா. இவருக்கு கல்யாணமாகி ஒரு மகள் உள்ளார். அவரும் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரிதாவின் கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில்தான் பவுடிக்கோணம் பகுதியை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக்கான பினு என்ற நபருடன் சரிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பினுவின் குழந்தைகள் படிக்கும் அதே பள்ளியில்தான் சரிதாவும் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கேதான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி நெருக்கமான பழக்கமாக உருவெடுத்துள்ளது.
இந்த சூழலில் சமீபத்தில் சரிதாவுக்கும், பினுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பினுவுடனான தொடர்பை சரிதா கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பினு, நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு சரிதாவின் வீட்டிற்கு சென்று வெளியே வரும்படி தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் தொடர்ந்து அதிகரித்துகொண்டே வர ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பினு, தான் கொண்டு வந்த பெட்ரோலை சரிதா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதை சற்றும் சரிதா எதிர்பார்க்காத நிலையில் உடல் முழுவதும் தீ பரவியது. மேலும், அந்த தீ பினுவின் உடலிலும் பரவிய நிலையில் அங்குள்ள கிணற்றில் குதித்து தப்பித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேங்கோட்டுகோணம் காவல்துறையினர் உடனடியாக தகவலறிந்து வந்து சரிதாவையும், பினுவை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சரிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில், பினு தற்போது குணமடைந்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினுவின் மீது தற்போது ஐபிசியின் 307 (கொலை முயற்சி), 326 (தானாக முன்வந்து தீயில் காயம் ஏற்படுத்துதல்) மற்றும் 447 (கிரிமினல் அத்துமீறல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் பெண் இறந்துவிட்டதால், பிரிவு 302 கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.