மயிலாடுதுறையில் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை - மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பரபரப்பு
கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினர் மீது போலீசார் பொய்வழக்கு வழக்குப்பதிவு செய்ததாக கூறி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகம் சேத்தூர் கிராத்தில் உள்ள நித்தியகல்யாணி மாரியம்மன் கோயிலில் கடந்த 26-ம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதி விழா முடிந்து சுவாமி கும்பிட கோயிலுக்கு சென்ற இருசமூகத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. கீழக்காலணித்தெருவை சேர்ந்த 19 வயதான விக்னேஷ் தரப்பினருக்கும், அம்மன்கோயில் தெருவை சேர்ந்த 45 வயதான பாலமுருகன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெரம்பூர் காவல்நிலையத்தில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தலா 6 பேர் என இருதரப்பை சேர்ந்த 12 பேர் மீது பெரம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பாலமுருகன் தரப்பினர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புசட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளிலும், விக்னேஷ் தரப்பினர் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விக்னேஷ் மீது வேண்டுமென்று பொய்யாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அவ்வழக்கை திரும்பப்பெறக்கோரி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சியினர் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமாரை சந்திப்பதற்கு டிஎஸ்பி அலுவலகம் வந்துள்ளனர்.
ஆனால், டிஎஸ்பி சஞ்ஜுவ்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்திற்கு சென்றதாக அங்கிருந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பலமணிநேரம் காத்திருந்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டிஎஸ்பி வராததால் ஆத்திரமடைந்து திடீரென்று டிஎஸ்பி அலுவலக வாயில் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு போட்டதை திரும்ப பெற கோரி முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் டிஎஸ்பி சஞ்ஜீவ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.