புதுச்சேரி: குத்துச்சண்டை போட்டிக்காக சென்ற கோவை மாணவி கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு
புதுச்சேரி கடலில் மூழ்கி கோவை கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்
புதுச்சேரி கடலில் மூழ்கி கோவை கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை பீளமேடு பகுதியில் கிருஷ்ணம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் 17 பேர் பயிற்சியாளர்களுடன் புதுச்சேரியில் நடைபெறும் குத்துச்சண்டை (பாக்சிங்) போட்டியில் பங்கேற்க நேற்று வந்தனர். இந்த நிலையில் புதுவையில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட மாணவிகள் விரும்பினர். அதன்படி பயிற்சியாளர்கள், மாணவிகளை அழைத்துக்கொண்டு சுற்றிப்பார்த்தனர்.
அதன்பின் மாலை 4 மணி அளவில் கடற்கரைக்கு வந்தனர். அங்கு தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல்பரப்பில் இறங்கி விளையாடினர். இதில் பயிற்சியாளர் மற்றும் மாணவிகள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் பயிற்சியாளரான கோவையை சேர்ந்த சர்வேஸ்வரன் (வயது 25), மாணவிகள் அமிர்தா (19), பொள்ளாச்சி தாவளத்தை சேர்ந்த பூமதி (19) ஆகியோர் சிக்கினர். இதைப்பார்த்த சக பயிற்சியாளர்கள், மாணவிகள் அதிர்ச்சி அடைந்து, காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கிருந்த உள்ளூர்வாசிகள் விரைந்து வந்து கடலில் தத்தளித்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த புதுவை பெரியகடை போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பயிற்சியாளர் சர்வேஸ்வரன், மாணவி அமிர்தா ஆகியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சை அளித்து அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மாணவி பூமதியை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சிறிதுநேர தேடலுக்குப் பின் அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பூமதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த இடத்தில் கடலில் குளித்த போது அலையில் சிக்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்