PM Safety Protocols | பிரதமர் பயண விதிமுறைகள் என்ன? பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்? SPG செய்வது என்ன?
மாற்று வழிகள் பெரும்பாலும் அரசால் தீர்மானிக்கப்பட்டு SPG-க்கு தெரிவிக்கப்பட்ட பின்னர்தான் பயணம் மேற்கொள்ளப்படும். நாச முயற்சி நடந்தால் SPG படையினருக்கு தெரியப்படுத்த உளவுத்துறை அதிகாரிகள் உள்ளனர்.
இந்திய பிரதமர் மோடியின் வருகை பஞ்சாப்பில் நடைபெற்ற போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பஞ்சாப்பிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்த போராட்டம் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் இருக்கும் ஹுசைன்வாலா என்று பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள இருந்தார். இதற்காக அங்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காரில் பயணம் மேற்கொள்வது குறித்து உடனே பஞ்சாப் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டது.
ஆனால் தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் இருந்து 30 கிமீ தூரம் முன்பு இருந்த போது பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்டது. காரணம் பாலத்திற்கு கீழ் இன்னொரு பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இது விவசாயிகளின் போராட்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த போராட்டம் யார் மூலம் நடத்தப்பட்டது என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இதனால் அங்கு மோடியின் கார் முடங்கியது. அந்த பாலத்தில் மோடியின் கார் நகர முற்பட்ட போது அவரின் காரை நோக்கி மஞ்சள் நிற பஸ் ஒன்றும் வந்து இருக்கிறது. இதன் உள்ளே போராட்டக்காரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து எஸ்பிஜி படையினர் உடனே மோடி காரை சுற்றி நின்று தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அதன்பின் அங்கு போராட்டம் தணியாமல் நீடித்து வந்தது. கடைசியில் வேறு வழியின்றி பிரதமர் மோடி திரும்பி சென்றார். பாதுகாப்பு குறைபாடுகளால் மோடியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தின் பயண திட்டம் கடைசி நேரத்தில் மாறியதால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது எப்படி, உளவுத்துறை மற்றும் மத்திய உள்துறை முன்கூட்டியே போராட்டத்தை கணிக்காமல் சறுக்கியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய வரலாற்றில் அதிக பாதுகாப்பு கொண்ட பிரதமர் என்றால் அது மோடிதான். அதி நவீன Mercedes-Maybach S650 கார் தொடங்கி சிறப்பு எஸ்பிஜி பாதுகாப்பு வரை பிரதமர் மோடிக்கு உயர் ரக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று அவரின் பாதுகாப்பில் பெரிய குறைபாடு ஏற்பட்டு அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியே கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில், பிரதமர் மோடியின் கார் அந்த பாலத்தில் 15-20 நிமிடம் முடங்கியது. அவரின் பாதுகாப்பில் பெரிய குறைபாடு உள்ளது. கடந்த சில வருடங்களில் பிரதமர் மோடியின் கான்வாய் ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட மோசமான பாதுகாப்பு இதுதான் என்று கூறியுள்ளனர்.
இவ்வளவு குழப்பங்கள் இருக்க, உண்மையில் யார்தான் வேலையை சரிவர செய்யாமல் இருந்தது? பிரதமரின் பாதுகாப்பிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் என்ன? அதில் எது நேற்றைய சம்பவத்தில் குறைந்தது? பார்ப்போம்:
சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) என்பது பிரதமரின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகும். எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, SPG ஏஜென்சியின் பாதுகாக்கும் ஒரே ஒரு நபர் பிரதமர் மட்டும் தான். பிரதமருக்கு நெருக்கமான பாதுகாப்பை வழங்கும் பொறுப்பு உயரடுக்கு கமாண்டோ படைக்குதான் உள்ளது. இதன் பொருள் பிரதமரைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் முதன்மையானவர்கள் SPG பணியாளர்கள் தான்.
ASL அல்லது மேம்பட்ட பாதுகாப்பு இணைப்பும் SPG ஆல் மேற்கொள்ளப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், பிரதமரின் பயணத்திட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் மத்திய நிறுவன அதிகாரிகளால் ஆவணப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்திற்கு பிரதமரின் வருகையின் போது, உள்ளூர் காவல்துறை நிமிடத்திற்கு நிமிடம் நிகழ்ச்சியை கண்கணிக்கிறது, ஆனால் அந்த பாதுகாப்பு பணிகள் அனைத்தும் SPG அதிகாரிகளால் மேற்பார்வை செய்யப்படும். ASL ஆனது பிரதமர் செல்லும் பாதையை சுத்தப்படுத்துகிறது. நாசவேலை தடுப்பு சோதனைகள், பிரதமருக்கு அருகில் வருபவர்களை சோதனை செய்தல் அனைத்தும் சிறப்பு பாதுகாப்பு குழுவால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அப்படியென்றால் சம்பவத்தின் முழுப் பொறுப்பும் SPGயிடம்தான் உள்ளதா?
இல்லை. நெருங்கிய பாதுகாப்பு SPGயின் பொறுப்பாக இருந்தாலும், பிரதமர் பயணம் செய்யும் இடங்கள் அனைத்தும் மாநில காவல்துறையால் பாதுகாக்கப்பட வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், பிரதமர் செல்லத் திட்டமிடப்பட்டுள்ள பாதை மாநில காவல்துறையால் இறுதி செய்யப்பட்டு பாதுகாப்புகளை பலப்படுத்தி, பிரதமர் செல்லுவதற்கு எந்த தடையும் இல்லாமல், எதுவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், பின்னர் அதனை SPG உடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். பிரதமரின் பயணத்திற்காக சாலைப் பாதையை பாதுகாப்பாக வைத்திருப்பது மாநில காவல்துறையின் பொறுப்பாகும். “வழி குறித்த முடிவு மாநில காவல்துறையால் SPG உடன் கலந்தாலோசித்து எடுக்கப்படுகிறது. வழக்கமாக, எதிர்பாராவிதமாக திடீரென மாற்றப்படும் வழிகளில் ஸ்கெலிட்டல் படை பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் அவசரகால சூழ்நிலை ஏற்பட்டு கடைசி நேர முடிவை எடுக்கலாம், இல்லையெனில் செல்லும் வழி, கண்காணிப்பு போன்றவை அனைத்தும் அரசால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு SPG உடன் பகிரப்படும்" என்று பெயர் தெரியாத நிலையில் ஒரு உயர் போலீஸ் கூறினார்.
மற்றொரு முன்னாள் டிஜிபி கூறுகையில், மாநில காவல்துறைக்கு எதிர்பாராவிதமாக திடீரென மாற்றப்படும் வழியைத் தயார்படுத்துவது மட்டுமல்லாமல், டிஜிபி அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரி பிரதமரின் குதிரைப்படையில் பயணிக்க வேண்டும் என்பது எஸ்ஓபியின் ஒரு பகுதியாகும். “பிஎம் கேவல்கேடில் டிஜிபி பயணம் செய்ய நியமிக்கப்பட்ட வாகனம் உள்ளது. அவர் கிடைக்கவில்லை என்றால், ஒரு நியமிக்கப்பட்ட அதிகாரி அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், இதனால் ஏதேனும் தேவைகள் ஏற்பட்டால், பிரதமரின் குதிரைப்படைக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை அவர் அல்லது அவள் உறுதிப்படுத்த முடியும்,” என்று மாநிலங்களுக்கு பல பிரதமர் வருகைகளைக் கையாண்ட அதிகாரி நியூஸ் 18 க்கு தெரிவித்தார்.
"ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்றதும்.. பிரதமர் மோடி சாலை வழியாக வருகிறோம்.. உடனே பஞ்சாப் போலீசாரிடம் பாதுகாப்பை அதிகரிக்கும்படி கூறினோம். 2 மணி நேர சாலை பயணம் மேற்கொள்ள வேண்டும். அதனால் கூடுதல் படையை குவிக்கும்படி கூறினோம். ஆனால் பஞ்சாப் அரசு மாற்று பிளான்படி கூடுதல் படைகளை குவிக்கவில்லை" என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
விமானப் பயணத்திற்கு என்ன மாதிரியான பாதுகாப்புகள் வழங்கப்படும்?
பிரதமர் ஒரு இடத்தை அடைய ஹெலிகாப்டர் சவாரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் ஒரு மாற்று சாலை வழி தயாராக வைக்கப்படும். முன்னாள் எஸ்பிஜி அதிகாரிகளின் கூற்றுப்படி, எதிர்பாராவிதமாக மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு வரும் பாதையும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. “பிரதமர் செல்லும் பாதையில் போலீசாரை வரிசையாக நிற்கவைப்பது அல்லது மாற்றுப் பாதையில் வரிசைப்படுத்துவது ஆகியவை முன்கூட்டியே சிறப்பாக செய்யப்படுகிறது. பிரதமரின் வருகைக்கு குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து சென்றடையும் இடம் வரை முழு ஒத்திகை நடத்தப்படும்" என்று முன்னாள் எஸ்பிஜி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எஸ்பிஜி, உள்ளூர் போலீஸ், உள்ளூர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அனைவரும் இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக உள்ளனர். பிரதமரின் வருகைக்கு முன்னதாக ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நான்காவது நிறுவனமாக உள்ளூர் சிவில் நிர்வாகம் உள்ளது. பிரதமர் செல்லும் வழித்தடங்களை சுத்தப்படுத்துவதற்கான பொறுப்பு மாநில அதிகாரிகள் மீது நிர்ணயிக்கப்படுவதை வரிசைப்படுத்தல் உறுதி செய்கிறது. மாற்று வழிகள் பெரும்பாலும் அரசால் தீர்மானிக்கப்பட்டு SPG க்கு தெரிவிக்கப்பட்டு இரு ஏஜென்சிக்கும் திருப்தி அடைந்தால் பிரதமரின் பயணம் மேற்கொள்ளப்படும். நாசவேலை முயற்சி ஏதேனும் நடந்தால் SPG படையினருக்கு தெரியப்படுத்த உளவுத்துறை அதிகாரிகள் உள்ளனர். இதில் உளவுத்துறை சொதப்பியது எப்படி என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அந்த சாலையில் போராட்டம் நடத்துவதை உளவுத்துறைதான் எஸ்பிஜிக்கு தெரிவித்து இருக்க வேண்டும். அவர்கள் இந்த எச்சரிக்கையை கொடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
"பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்பை எஸ்பிஜி படைத்தான் உறுதி செய்ய வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. அதே சமயம் சாலை போக்குவரத்தின் போது அந்த பாதையில் பாதுகாப்பை மாநில போலீஸ்தான் உறுதி செய்ய வேண்டும். இந்த விவசாயிகள் போராட்டம் கூட எதிர்பார்க்காத ஒன்று கிடையாது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பிரதமர் மோடி செல்லும் பாதையில் நடக்க இருந்த போராட்டத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று மத்திய உள்துறை அதிருப்தியில் இருக்கிறது. அதோடு பிரதமர் மோடி இந்த பாதையை பயன்படுத்த போவது மாநில அரசுக்கு மட்டுமே தெரியும், அது எப்படி போராட்டக்கார்களுக்கு தெரிந்தது", என்றும் மத்திய உள்துறை அமைச்சக தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது.
புதன்கிழமை நடந்த சம்பவம் உளவுத்துறையின் தோல்வியா என சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கேள்வி எழுப்பியுள்ளார். “பிரதமரின் பாதுகாப்பு விவரங்களில் பல ஓட்டைகள் உள்ளன, இது பேரழிவை ஏற்படுத்தும் என்ற உண்மையைப் நினைத்து நான் வருத்தப்படுகிறேன். அவர் பயணம் செய்யும்போது கட்டளைத் தொடர்கள் தெளிவாக இருக்க வேண்டும், மேலும் யாரேனும் விரும்பாதவர்கள் இருந்தால் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கில் தெளிவாக எச்எம், எஸ்பிஜி, மாநில போலீஸ் ஆகியோர் கவனமாக இருந்திருக்க வேண்டும்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார். 2006 ஆம் ஆண்டில், திருவனந்தபுரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு மீறப்பட்டது, ஏனெனில் அவரது பைலட் வாகனம் அவரை ராஜ் பவனுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக நகரத்தின் வேறு ஒரு வழியாக அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
நடந்த சம்பவத்திற்காக மாநில அரசின் மீது மத்திய உள்துறை அமைச்சகம் புகார் வைத்துள்ளது. அதே சமயம் முதல்வர் சன்னி அளித்துள்ள விளக்கத்தில், "எந்த விதமான பாதுகாப்பு குறைபாடும் இல்லை. பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவே இருந்தது. ஆனால் அவர் கடைசியில் எங்களிடம் சொல்லாமல் கார் மூலம் வந்துவிட்டார். பாஜக கூட்டத்திற்கு 7000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 700 பேர் மட்டுமே வந்தனர். எனவே இதை மறைக்க தற்போது ஏதேதோ விஷயங்களை அவர்கள் காரணமாக சொல்கிறார்கள்", என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையில் சிறு சிறு விரிசல்கள் இருப்பது ஓரளவுக்கு புலப்படுகிறது. மோடி பஞ்சாப் செல்கிறார் என்றதும் விவசாயிகள் போராட்டம் செய்ய வாய்ப்புள்ளது என்பது ஒட்டுமொத்த இந்தியாவே சந்தேகித்த விஷயம், ஆனால் அதனை உளவுத்துறை கண்டுகொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. அதன் பிறகு திடீர் பயண மாற்றங்கள், மாற்றத்திற்கு முன் செய்யப்படாத சோதனை, ஒத்திகை ஆகியவை அனைத்தும் இதற்கு காரணிகளாக நிற்கின்றன. அதுபோக போராடியவர்கள் யார் என்ற விளக்கமும் புலப்படாததால் ஒட்டுமொத்தமாக பஞ்சாப் முதல்வர் மீது லைட்டை திருப்புவதற்கு முன் தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும், அப்போது மட்டுமே இதில் நடந்த தவறை கண்டறிய முடியும்.