சேத்துப்பட்டு; நில பாகப்பிரிவினை தகராறு : தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது
நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரிய தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்றுள்ளார்
சேத்துப்பட்டு அருகே நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரிய தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் தனது சொந்த தம்பியை சுட்டுக்கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரரை போளூர் அருகே கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த உள்ள கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு தேவகி இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஜெகதீஷன் வயது (42). இவர் முன்னாள் ராணுவ வீரர். ராணுவத்தில் இருந்து வெளியேற் 3 வருடங்கள் ஆகிறது. இவருக்கு லைசன்சுடன் கூடிய கை துப்பாக்கி ஒன்று வைத்திருந்தார். இவருடைய மனைவி சிவகாமி இவர்களுக்கு ஒரு மகள், ஒருமகன் உள்ளனர். 2-வது மகன் கோதண்டராமன் வயது (31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர்களுக்கு சொந்தமாக கரிப்பூர் கிராமத்தில் 7 ஏக்கர் நிலமும், அந்த நிலத்திலேயே வீடும் உள்ளது. அண்ணன், தம்பியான இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். ஜெகதீஷன் சரிவர விவசாய வேலை செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தேவகியும், அவரது இளைய மகன் கோதண்டராமனும் தேவிகாபுரத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தற்போது மீண்டும் தாயும் இளைய மகனும் சொந்த கரிப்பூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.இந்த நிலையில் கோதண்டராமனுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரி அவரது அண்ணனிடம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இதனால் அடிக்கடி அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இன்று மே (16) மதியம் மீண்டும் நிலம் குறித்து சகோதரர்கள் இருவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே ஜெகதீஷன் அவரிடமிருந்த கைத்துப்பாக்கியால் அவரது தம்பி கோதண்டராமனை நோக்கி சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி தோட்டா கோதண்டராமன் நெஞ்சை துளைத்து தூக்கி வீசியது. இதனால் படுகாயம் அடைந்த கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். அவர்கள் வருவதற்க்குள் ஜெகதீஷன் மற்றும் அவருடைய மனைவி சிவகாமி அங்கிருந்து இருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் சேத்துப்பட்டு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளானர். தகவலறிந்த சேத்துப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், சேத்துப்பட்டு ஆய்வாளர் பிரபாவதி, ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போழுது ரத்த வெள்ளத்தில் இருந்த கோதண்டராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல காவல்துறையினர் முயன்றனர். அப்போது அவருடைய உறவினர்கள் சாலையை மறித்து முள் கம்புகளை வெட்டி போட்டு காவல்துறையினரிடம் உடலைத் தருவதற்கு மறுத்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பிறகு காவல்துறையினர் கோதண்டராமனின் உறவினர்களிடம் சமாதானம் பேசி கோதண்டராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் தலைமறைவாக இருந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெகதீசனை காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் அண்ணனே தம்பியை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.