கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
சென்னை, அண்ணா நகரில் கஞ்சா போதையில் நைட்டி அணிந்து கொண்டு இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கஞ்சா பயன்பாடு அதிகளவில் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இதைத்தடுப்பதற்கு அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில், சென்னையில் நேற்று கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் நைட்டியுடன் ரகளை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கஞ்சா போதையில் கங்கை அமரன்:
சென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். அவரது பெயர் கங்கை அமரன். அவருக்கு வயது 38. இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் முதலமைச்சர், அமைச்சர் ஆகியவர்களை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசி வந்தார். குறிப்பாக, அந்த வீடியோக்களில் பேசும்போது அவர் கஞ்சா புகைத்தபடியே பேசி வந்தார்.
இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் நேற்று சென்றனர். அப்போது, அவர் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு வெளியில் வர மறுத்தார். அவரை வெளியில் வரச் சொல்லி போலீசார் வற்புறுத்தியும் அவர் வெளியில் வர மறுத்துவிட்டார். அப்போது, திடீரென தனது குடியிருப்பு ஜன்னலின் கண்ணாடியை உடைத்தார். கையில் பாக்சிங் உறை அணிந்து அந்த கண்ணாடியை அவர் உடைத்தார்.
வெடிகுண்டு மிரட்டல்:
பின்னர், அவர் ஜன்னலின் வழியாக வெளியில் வந்தார். அப்போது, அவர் பெண்கள் அணியும் ஆடையான நைட்டியை அணிந்து இருந்தார். அப்போது, போலீசாரிடம் “ என்னை பிடிக்க முயன்றால் எனது வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். வெடிக்க வைத்துவிடுவேன்” என்று மிரட்டினார். இதனால், போலீசாரும், அங்கு கூடியிருந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, போலீசார் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் கங்கை அமரன் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிஓட முயற்சித்தார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரது வீட்டை பரிசோதனை செய்தபோது அவரது வீட்டில் மர்மபொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
பரபரப்பு:
போலீசார் அந்த பொருளை உடனடியாக பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட கங்கை அமரனுக்கும் ரவுடி ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கஞ்சா போதைக்கு அடிமையாக இருக்கும் கங்கை அமரன் அடிக்கடி இதுபோன்று அந்த பகுதியில் ரகளையில் ஈடுபடுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நைட்டி அணிந்து கொண்டு கஞ்சா போதையில் இளைஞர் ரகளை செய்ததால் அந்த பகுதியில் பரபரப்ப ஏற்பட்டது.