கல்லூரி மாணவர் கொலையில் புதிய திருப்பம் : முக்கிய குற்றவாளியான 12ம் வகுப்பு மாணவி கைது!
கல்லூரி மாணவரை கொலை செய்து புதைத்த வழக்கில் புதிய திருப்பமாக முக்கிய குற்றவாளியான 12ம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு, மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் பிரேம்குமார். 20 வயதான இவர் கடந்த 17-ந் தேதி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரேம்குமார் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரது ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டியதால், மாணவிகள் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் நண்பரிடம் கூறி, கூலிப்படை மூலமாக பிரேம்குமாரை கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
மாணவிகள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலை செய்த மாணவிகளின் நண்பரான அசோக் மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், பிரேம்குமாரை கொலை செய்த அசேக் குமார் ( வயது 22), எம்,லெனின் (21), எம்.பிரவீன்குமார் (21) இ.ஜெகநாதன் (22) ஆர். ஸ்டீபன் (21) மற்றும் ஆர்.மோசஸ் (29) ஆகிய ஆறு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆபாச படத்தை வெளியிடுவதாகவும், அதை வெளியிடாமல் இருக்க ரூபாய் 1 லட்சம் அளிக்க வேண்டும் என்றும் மிரட்டியதால் மாணவிகள் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அப்போது, அவர்களில் ஒரு மாணவி தனது சகோதரியிடம் இதுதொடர்பாக கூறியுள்ளார்.
12ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவியின் சகோதரி இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பேசி பழகி வந்த அசோக்குமாரிடம் இதுதொடர்பாக கூறியுள்ளார். மேலும், சிறுமிகள் மூன்று பேரும் சேர்ந்து பிரேம்குமாரை தீர்த்துக்கட்ட அசோக்குமாரை தூண்டியதும் போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதன் பின்னரே, பிரேம்குமாரை ரெட்ஹில்ஸ் டோல்கேட் அருகே வரவழைத்து அசோக்கும், அவரது கும்பலும் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.
பிரேம்குமாரை கொலை செய்த அசோக் உள்பட 6 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மாணவிகள் மூன்று பேரையும் அரசு காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர். கல்லூரி மாணவி கொலை வழக்கில் பள்ளி மாணவிகள் மூன்று பேரும் இணைந்து திட்டமிட்டு கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்