பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கிய சிபிஐ..!
கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணை வருகின்ற 29 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணை செய்து வந்த நிலையில், 2019ம் ஆண்டு குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால் , பாபு ஆகிய 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் என்ற நபர் 9 வது நபராக கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 9 பேருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகை நகலானது வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையை வரும் 29 ம் தேதிக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார். 29ம் தேதிக்கு பின்னர் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுப் பரவல், சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களில் வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அண்மையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பின்னர் இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். தற்போது குற்றப்பத்திரிகை நகல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.