Crime: கோவையில் ஆயுதங்களுடன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட ரவுடி மீது வழக்கு பதிவு
மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்த்குமார் புகார் அளித்தார்.
கோவை மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ காட்சிகளை பதிவிடும் நபர்கள் மீது கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தருண் என்கிற இன்பெண்ட் ராஜ் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்த்குமார் அளித்த புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தருண் என்கிற இன்பெண்ட் ராஜ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தருண் என்கிற இன்பெண்ட் ராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்மையில் சத்திய பாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். மறுநாள் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்பகை காரணமாக கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மாநகர காவல் துறையினர் ரவுடிகளை கண்காணித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் காவல் துறையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் இளம் பெண் ஒருவர் ’பிரண்ட்ஸ் கால் மி தமன்னா’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அதில் புகைப்பிடித்தவாறும், கையில் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிட்டார். அதில் “எதிரி போட நினைத்தால், அவனை போடுவோம். ஓடுனா கால வெட்டுவோம்” என்ற வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுடன் ரீல்ஸ் செய்திருந்தார். மேலும் இந்த பெண் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களுடன் இன்ஸ்டாவில் நண்பராக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் விருதுநகரை மாவட்டத்தை சேர்ந்த வினோதினி (25) வயது என்பது தெரியவந்தது. பின்னர் மாநகர காவல் துறையினர் வினோதினி மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் காவல் துறையினர் தேடிக் கொண்டிருந்தாலும் கணவருடன் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிக்களை அவர் பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஆயுதங்களுடன் தான் ரீல் செய்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த வீடியோக்கள் எனவும், டிரெண்டிங்காக செய்த வீடியோக்கள் எனவும், தற்போது தான் திருந்தி தனது கனவருடன ஆறு மாதம் கர்ப்பிணியாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். நான் வந்தால் மட்டுமே தனது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சிலரை விடுவிப்பேன் என காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் எனக் கூறியுள்ளார். அது பழைய வீடியோ நான் இப்போது அதுபோல எதுவும் செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே பதியப்பட்ட கஞ்சா வழக்கு தொடர்பாக தமன்னாவை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.